“சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்


“சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” - நடிகை அமலாபால்
x
தினத்தந்தி 26 July 2019 12:00 AM GMT (Updated: 25 July 2019 7:55 PM GMT)

அமலாபால் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆடை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அமலாபால் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிகின்றன. இந்த படம் பண பிரச்சினையில் சிக்கி வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டபோது அமலாபால் ரூ.25 லட்சம் சொந்த பணத்தை கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் டைரக்டர் பாரதிராஜா, நடிகை அமலாபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமலாபால், “எனது கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன். மண், மொழி மற்றும் மக்களிடம் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்” என்றார். பின்னர் அமலாபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சாதி, நிறம் சம்பந்தமான வேறுபாடுகளை களைய வேண்டும். மக்கள் மத்தியில் மனித தன்மையை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். சமீபகாலமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மதம், சாதி ரீதியாக அச்சமும் ஏற்படுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் மனிதனாக பார்க்க வேண்டும்.

இந்த உணர்வு சமூகத்தில் பரவ வேண்டும். நிஜமான மனிதம் என்றால் என்ன என்பதை வயதானபிறகே ஒவ்வொருவரும் உணர்கிறோம். எனக்கு மைனா படத்தில் இருந்து ஆடை படம் வரை ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அமலாபால் கூறினார்.

Next Story