அசாம் வெள்ள நிவாரணம்: அமிதாப்பச்சன் ரூ.51 லட்சம் உதவி


அசாம் வெள்ள நிவாரணம்: அமிதாப்பச்சன் ரூ.51 லட்சம் உதவி
x
தினத்தந்தி 26 July 2019 12:15 AM GMT (Updated: 25 July 2019 8:02 PM GMT)

அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

மழை வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசாமில் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கு வசித்த சுமார் 40 லட்சம் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளனர். இதுபோல் பீகாரில் 12 மாவட்டங்களை சேர்ந்த 75 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல இடங்களில் மக்கள் உணவு, உடைகள் இல்லாமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள்.

பிராணிகள், விலங்குகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. பிரபல சுஜிரங்கா தேசிய பூங்காவில் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வழங்கி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று அசாம் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து அசாம் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் ரூ.51 லட்சம் வழங்கி உள்ளார். இதற்காக அமிதாப்பச்சனுக்கு அசாம் முதல்-மந்திரி சர்பானந்த சோனாவால் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் அக்‌ஷய்குமார் அசாம் வெள்ள நிவாரணத்துக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.

Next Story