“அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை” டைரக்டர் பாரதிராஜா பேச்சு


“அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை” டைரக்டர் பாரதிராஜா பேச்சு
x
தினத்தந்தி 27 July 2019 11:30 PM GMT (Updated: 27 July 2019 8:58 PM GMT)

அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை” என்று டைரக்டர் பாரதிராஜா கூறினார்.

சென்னை, 

பாரதிராஜா நடித்துள்ள ‘கென்னடி கிளப்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

“நல்ல கலைஞர்களை, வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவிலை என்றால், நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை. இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இந்த படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை.

சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள், கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

நான் அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், டைரக்டர் பாரதிராஜாவே பிறக்க விரும்புகிறேன். இது, சினிமா அல்ல. தென் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுசாமிக்கு இருக்கிறது. இந்த படத்தில் நல்லுசாமியாக நான் நடித்து இருக்கிறேன்.

சசிகுமாரை பார்க்கும்போது, அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போதுதான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது. இந்த படத்தை தொழில் சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார், சுசீந்திரன்.”

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

விழாவில் டைரக்டர்கள் அகத்தியன், எஸ்.டி.சபா, எழில், லெனின் பாரதி, சசிகுமார், ராம்பிரகாஷ், சுசீந்திரன், பட அதிபர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், டி.சிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Next Story