கிராமத்து கதையில் ரஜினிகாந்த்


கிராமத்து கதையில் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 8 Aug 2019 11:30 PM GMT (Updated: 8 Aug 2019 5:55 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ படத்தை அடுத்து நடிக்கும் திரைப்படம் கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வந்த ‘காலா’ படத்தை ரஞ்சித்தும், ‘2.0’ படத்தை ஷங்கரும் இயக்கி இருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ‘பேட்ட’ படம் ஜனவரியில் திரைக்கு வந்தது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இதில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு மும்பை பகுதியில் 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு தனி கட்சி தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஏற்கனவே மும்பை படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் டைரக்டர் சிவாவை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்து கதை கேட்டார். அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் முந்தைய படங்களான எஜமான், படையப்பா சாயலில் கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இது அவருக்கு 168-வது படம்.

படப்பிடிப்பு 2, 3 மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது. அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்குமார் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story