சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பாராட்டப்பட்ட விஜயசாந்தி அந்த பட்டத்தை வைத்து இருக்கிறாரா? அல்லது தானம் வழங்கி விட்டாரா? (ஏ.வினோத், சென்னை–1)

விஜயசாந்தியின் நடிப்பையும், துணிச்சலாக சண்டை காட்சிகளில் நடித்ததையும் பாராட்டி ரசிகர்கள் அவருக்கு கொடுத்த பட்டம் அது. அதை அவர் தானமாக யாருக்கும் வழங்கவில்லை!

***

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டியை இப்போதெல்லாம் திரையில் பார்க்க முடியவில்லையே, ஏன்? (எஸ். வெங்கட், திருச்சி)

சமீரா ரெட்டி சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு, குடும்ப வாழ்க்கைக்குள் போய்விட்டார்! அதனால் அவர் நடிக்கவில்லை!

***

குருவியாரே, அனுஷ்கா உடல் எடையை குறைத்து விட்டாராமே... எப்படி குறைந்தார்? என்ற ரகசியத்தை அவர் சொல்வாரா? (எம்.அபிராமி, காஞ்சீபுரம்)

‘‘அது ஒன்றும் ராஜ ரகசியம் இல்லை. மூலிகை மருந்தும், கடுமையான உடற்பயிற்சியும்தான்!

***

மணிரத்னம் இதுவரை எத்தனை படங்களை இயக்கியிருக்கிறார்? (ஆர்.குமாரசாமி, நாகர்கோவில்)

மணிரத்னம் இதுவரை 37 படங்களை இயக்கியிருக்கிறார்!

***

குருவியாரே, வில்லனாக நடித்துக்கொண்டிருந்த சத்யராஜ் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் எது? (கே.செல்வராஜ், தேவகோட்டை)

சத்யராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படம், ‘சாவி.’

***

ரகுல்பிரீத்சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இரண்டு பேரில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (ஜெயராஜ், அருப்புக்கோட்டை)

ரகுல்பிரீத்சிங் வெளிமாநில இறக்குமதி என்பதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொள்கிறார்!

***

குருவியாரே, கார்த்திக் நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

‘அலைகள் ஓய்வதில்லை,’ ‘வரு‌ஷம் 16,’ ‘கிழக்கு வாசல்’ உள்பட பல படங்கள், கார்த்திக் நடிப்பில், 175 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தன!

***

திரிஷா தற்போது யாரை காதலித்து வருகிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அவர் வீட்டில் புதுவரவாக வந்திருக்கும் ஒரு ‘செல்லப்பிராணி’ மீது திரிஷாவுக்கு காதலோ காதல்...!

***

குருவியாரே, சிம்பு தனது திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறாரே, ஏன்? (என்.வசந்த், உடுமலைப்பேட்டை)

பெண்ணை அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். குடும்பத்தினருக்கு பிடித்தால், அவருக்கு பிடிக்கவில்லையாம். சிம்பு திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே போவதன் ரகசியம் இதுதான்!

***

அரசியலில் புதுசாக இறங்கியிருக்கும் பிரகாஷ்ராஜ், தனி கட்சி தொடங்குவாரா? (ஏ.பி.கோபால், திருநின்றவூர்)

தனி கட்சியின் ஏற்றம்–இறக்கங்களை பார்த்தவர் என்பதால் அதில் பிரகாஷ்ராஜுக்கு உடன்பாடு இல்லையாம்!

***

குருவியாரே, சார்மி என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (இரா.புகழ்மணி, கீரனூர்)

சார்மி கைவசம் புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் வீட்டிலேயே இருந்து கொண்டிருப்பதால் உடம்பு ஒரு சுற்று பருத்து விட்டதாம்!

***

சசிகுமார் நடித்து வரும் ‘கென்னடி கிளப்,’ ‘நாடோடிகள்–2,’ ‘ராஜவம்சம்’ ஆகிய மூன்று படங்களில் எந்த படம் முதலில் திரைக்கு வரும்? (அருண் பிரசாத், பெங்களூரு)

‘கென்னடி கிளப்’ முதலில் திரைக்கு வரும். ‘நாடோடிகள்–2’ இரண்டாவதாகவும், ‘ராஜவம்சம்’ மூன்றாவதாகவும் திரைக்கு வரும்!

***

குருவியாரே, நடிப்பை விட்டு ஒதுங்கிய எல்லா நடிகைகளுமே உடல் எடை கூடி, குண்டாகி விடுகிறார்களே... ஏன்? (வே.தேவஜோதி, மதுரை)

விரக்தியும், வேதனையும் கலந்தால் கூட, உடம்பு குண்டாகி விடுமாம்!

***

இயல்பாகவே அழகும், அதிக கவர்ச்சியும் கொண்ட நடிகை யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

இரண்டெழுத்தில் பெயரை கொண்ட நடிகை!

***

குருவியாரே, ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைக்கிறார். விஜய் ஆண்டனி எப்படி? (வி.நேரு, நாட்டரசன் கோட்டை)

விஜய் ஆண்டனிக்கு இசையை விட, நடிப்பில்தான் அதிக ஈடுபாடு!

***

எந்த கதாநாயகனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் ஆசைப்படுகிறார்? (ஜே.விஸ்வநாத், மும்பை)

ரஜினிகாந்துடன் ஜோடி சேர கீர்த்தி சுரேஷ் ஆசைப்படுகிறாராம். (அடுத்த படத்தில் இந்த ஜோடியை எதிர்பார்க்கலாம்!)

***

குருவியாரே, என் இதயம் 24 மணி நேரமும் தாரா...தாரா...நயன்தாரா... என்று துடிக்கிறது. அதற்கு என்ன மருந்து சாப்பிடலாம்? (பி.சசிகுமார், சின்ன சேலம்)

இந்த நோய்க்கு பொறுப்பான மருத்துவர், டைரக்டர் விக்னேஷ் சிவன்தான். அவரிடம் கேட்டால், ‘நல்ல மருந்து’ கொடுப்பார்!

***

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? (பெ.சுரேஷ், சென்னை)

‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது!

***

குருவியாரே, அஜித் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘நேர்கொண்ட பார்வை’ என்ன மாதிரியான படம்? (ஜி.ஜீவா, கோபிச்செட்டிப்பாளையம்)

சமூகத்துக்கு குறிப்பாக இன்றைய பெண்கள் சமூகத்துக்கு அத்தியாவசியமான படம்!

***

பிரியா பவானி சங்கர் பற்றி...? (எல்.சண்முகப்ரியன், சேலம்)

தமிழ் பட உலகுக்கு நல்வரவு!

***