குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்?


குருவியார் கேள்வி-பதில்கள் : கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்?
x
தினத்தந்தி 18 Aug 2019 5:06 AM GMT (Updated: 2019-08-18T10:36:12+05:30)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, நயன்தாராவும், (கடலோர கவிதை) ரேகாவும் ஏறக்குறைய ஒரே ஜாடையில் தெரிகிறார்களே...இருவரும் உறவினர்களா? இரண்டு பேருக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? (விக்னேஷ்வரன், சென்னை)

நயன்தாராவும், ரேகாவும் ரத்த சம்பந்தமான உறவினர்கள் அல்ல. இருவரும் ஒரே (கேரளா) மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த ஒற்றுமை தவிர, இருவருக்கும் இடையே வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. நயன்தாராவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரேகாவுக்கு திருமணமாகி, தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறாள்!

***

ரேவதி இன்னும் உற்சாகத்துடன், பாடல் காட்சிகளில் நடனம் ஆடுகிறாரே, எப்படி? (ஜே.அஸ்வின், தேவகோட்டை)

ஐம்பது வயதெல்லாம் ஒரு வயதே அல்ல...இன்னும் உழைக்கலாம்...உற்சாக நடனம் ஆடலாம் என்ற தன்னம்பிக்கை ரேவதியிடம் நிறையவே இருக்கிறது. அதுவே அவரை உற்சாகமாக ஆட வைத்ததாம்!

***

குருவியாரே, ராகவா லாரன்சும், சுந்தர் சி.யும் பேய் படங்களாக எடுத்து தள்ளுகிறார்களே...ஏன்? (முருகானந்தம், உடையாப்பட்டி)

லாரன்ஸ், சுந்தர் சி. இருவருக்கும் பேய்கள்தான் அதிர்ஷ்ட தேவதைகளாக அமைந்து விட்டார்கள். இருவரும் எடுக்கும் படங்களை எல்லாம் வெற்றிகரமாக ஓட வைப்பது அந்த பேய்கள்தான் என்று இரண்டு பேரும் நம்புகிறார்கள்!

***

‘‘ஓ வசந்த ராஜா...தேன் சுமந்த ரோஜா...’’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம் எது, அதில் நடித்த நடிகை யார்? (ஆர்.வி.வெங்கட்ராம், ஸ்ரீரங்கம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘நீங்கள் கேட்டவை.’ பாடல் காட்சியில் நடித்தவர், தேசிய விருது பெற்ற அர்ச்சனா!

***

குருவியாரே, இன்றைய தலைமுறை நடிகைகளில், முறைப்படி நன்கு நடனம் ஆட தெரிந்தவர் யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ஷோபனா! இவர் அளவுக்கு முறைப்படி நடனம் கற்று ஆடுகிறவர் வேறு எந்த நடிகையும் இல்லை!

***

ஜோதிடம் மீது அதிக நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்ட திரையுலக பிரமுகர் யார்? (பெ.கல்யாண்குமார், தாம்பரம்)

ஜோதிடத்தில், ‘நம்பர்–1 ஆக அதிக ஈடுபாடு காட்டியவர், டி.ராஜேந்தர்!

***

பேசிப்பழகுவதற்கு கேத்தரின் தெரசா எப்படி? கலகல சுபாவமா, ஒதுங்கிப் போகிற சுபாவமா? (ரங்கசாமி, கோத்தகிரி)

கேத்தரின் தெரசா முன்கோபக்காரர் என்று அவருடன் பணிபுரிந்த படக்குழுவினர் சொல்கிறார்கள். உடன் நடிக்கும் கதாநாயகர்களிடம் மட்டும் அவர் கலகலப்பாக பேசுவாராம்!

***

குருவியாரே, ஆண்ட்ரியாவுக்கு நடிப்பு தவிர, வேறு எந்த திறமையும் உண்டா, இல்லையா? (கா.மாதேஷ், திண்டுக்கல்)

ஆண்ட்ரியா இனிய குரலில் பாடுவார். மிக பிரமாதமாக கவிதையும் எழுதுவாராம். ஓய்வு நேரங்களில் கவிதை எழுதுவது, இவரது பொழுதுபோக்கு!

***

தனுஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் எது, அதில் கதாநாயகி யார், டைரக்டர் யார்? (பி.அசோக், நாகர்கோவில்)

தனுஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘அசுரன்.’ இந்த படத்தின் கதாநாயகி, மஞ்சுவாரியர். படத்தின் டைரக்டர், வெற்றிமாறன்!

***

குருவியாரே, ஹன்சிகா மோத்வானி நடிக்க வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்? (வெ.ஆனந்த், திருச்சி)

ஹன்சிகா நடிக்க வருவதற்கு முன், கல்லூரி மாணவியாக இருந்தார்!

***

சாய்பல்லவி, ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (ஆர்.அலெக்சாண்டர், கோவை)

சாய்பல்லவியின் சம்பளம், ஒரு படத்துக்கு ஒரு கோடியாம்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகில் முதன்முதலாக தயாரான ‘சினிமாஸ்கோப்’ படம் எது? அதில் நடித்தவர்கள் யார்–யார்? (கோவிந்தராஜ், திருக்கோவிலூர்)

தமிழில் தயாரான முதல் ‘சினிமாஸ்கோப்’ படம், ‘ராஜராஜசோழன்.’ அதில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன், முத்துராமன், சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள்!

***

ஆஷ்னாசவேரி, பூர்ணா ஆகிய இரண்டு பேரின் சொந்த ஊர் எது? (கே.ஸ்ரீதர், ராசிபுரம்)

ஆஷ்னாசவேரி, மும்பையை சேர்ந்தவர். பூர்ணா, கேரளாவை சேர்ந்தவர்!

***

குருவியாரே, சமந்தா தமிழ் படத்தில் அதிகமாக நடித்து இருக்கிறாரா, தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து இருக்கிறாரா? (எஸ்.வெற்றிவேல், மதுரை)

சமந்தா தெலுங்கை விட, தமிழ் படங்களில் அதிகமாக நடித்து இருக்கிறார்!

***

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்–2’ படத்தில் கதாநாயகி யார்? (சசி, வல்லம்)

காஜல் அகர்வால்!

***

குருவியாரே, படத்துக்கு படம் கதாநாயகிகளை மாற்றிக் கொண்டே இருக்கும் கதாநாயகர்கள் யார்–யார்? (இரா.அருள்செல்வன், பொங்கலூர்)

விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து இப்போதைய காலகட்டம் வரை, தமிழ் பட கதாநாயகர்கள் அனைவரும் படத்துக்கு படம் தங்கள் ஜோடியை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரே கதாநாயகியுடன் பல படங்களில் ஜோடி போட்டதெல்லாம் அந்தக்காலம்!

***

கீர்த்தி சுரேஷ் எங்கேதான் இருக்கிறார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

கீர்த்தி சுரேஷ் இப்போது மும்பையில் முகாமிட்டு (இந்தி படங்களில் நடிப்பதற்காக) இருக்கிறார்!

***

குருவியாரே, நகைச்சுவை வேடங்களில் வந்து போய்க்கொண்டிருந்த யோகிபாபுவும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டாரே...இது எத்தனை காலம் ஓடும்? (ஆர்.பிரபு, ஊட்டி)

ஓடும் வரை ஓடட்டும்...ஓடி முடித்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று யோகி பாபு முடிவு செய்து இருக்கிறார்!

***

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை. கமல்ஹாசன், டைரக்டர் பாலா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகிய மூவர் கூட்டணியில் ஒரு படம் உருவாகுமா? (பி.குமரன், உறையூர்)

உங்களின் நல்ல ரசனை நிறைவேறும் வகையில் மூவரும் உடன்பட்டால், அந்த படம் வியாபார ரீதியில் மிகப்பெரிய வெற்றியை சம்பாதிக்கும்!

***

குருவியாரே, ‘பிச்சைக்காரன்’ பட கதாநாயகி சாத்னா டைட்டஸ், தற்போது எந்த படத்தில் நடிக்கிறார்? (ஆர்.எஸ்.தன்னாசி, கொளத்துப்பாளையம்)

சாத்னா டைட்டஸ், கார்த்தி என்ற வினியோகஸ்தரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை!

***

ஆனந்தி முகவசீகரத்துடன் அழகாக இருந்தும், அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே...? (எம்.சாதிக்பாட்சா, மணியாச்சி)

முகவசீகரத்துடன் அழகாக இருந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் நடிக்கவும் தெரிய வேண்டும் என்று ரசிகர்கள் முடிவெடுத்து விட்டார்களோ, என்னவோ...!

***

Next Story