மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா


மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா
x
தினத்தந்தி 19 Aug 2019 3:30 AM GMT (Updated: 2019-08-19T06:22:40+05:30)

ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பின் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விறு விறுப்பாக நடந்து வருகிறது. மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு காட்சிகளை சிலர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் ரஜினி தோற்றங்கள் வெளியே கசிந்துவிட்டன. தற்போது செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடைவிதித்துள்ளனர்.

சமீபத்தில் மும்பையில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தர்பார் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார்கள். நயன்தாரா காஞ்சீபுரத்துக்கு சென்று அத்திவரதரை தரிசித்தார். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். ஒரே விமானத்தில் இருவரும் அருகருகே அமர்ந்து பயணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்பார் படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, சுமன், மனோபாலா, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Next Story