சிறந்த நடிகர்-நடிகை தனுஷ், திரிஷாவுக்கு ‘சைமா’ விருது மோகன்லால் வழங்கினார்


சிறந்த நடிகர்-நடிகை தனுஷ், திரிஷாவுக்கு ‘சைமா’ விருது மோகன்லால் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Aug 2019 4:30 AM GMT (Updated: 19 Aug 2019 1:00 AM GMT)

சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது. இதில் 4 மொழி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

சிறந்த நடிகருக்கான விருது ‘வடசென்னை’ படத்தில் நடித்த தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘96’ படத்தில் நடித்த திரிஷாவுக்கும் வழங்கப்பட்டன. ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெற்றனர். தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை விருதை பெற்றார்.

சிறந்த படத்துக்கான விருதை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றது. சிறந்த இயக்குனர் விருது பாண்டிராஜுக்கும், சிறந்த அறிமுக இயக்குனர் விருது நெல்சனுக்கும், சிறந்த அறிமுக நடிகர் விருது தினேசுக்கும், அறிமுக நடிகை விருது ரெய்சாவுக்கும் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ஆர்.டி.ராஜசேகர் பெற்றார். விருதுகளை நடிகர் மோகன்லால் வழங்கினார்.

சிறந்த பாடலாசிரியர் விருது விக்னேஷ் சிவனுக்கும், பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது யோகிபாபுவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும் வழங்கப்பட்டன. விழாவில் தனுஷ் பேசும்போது, “வடசென்னை படத்துக்காக 2 வருடம் கடுமையாக உழைத்தோம். அதற்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி” என்றார்.

பான்டலுன் ஸ்டைல் ஐகான் விருதை யஷ், சமந்தா ஆகியோர் பெற்றனர். இதன் வர்த்தக தலைவர் ரியான் பெர்ணான்டஸ் பேசும்போது, மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி திரையுலக பேஷன்களுக்கும் பான்டலுன் முக்கிய பங்களிப்பை செய்கிறது என்று தெரிவித்தார். பேஷன் ஐகான் போட்டியில் வென்ற 8 ரசிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் நடிகர்கள் பிருதிவிராஜ், டோவினா தாமஸ், சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ராய்லட்சுமி, ஸ்ரேயா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, நிகிலா விமல், சுவாதிஷ்தா, ஜனனி அய்யர், டைரக்டர் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி, ராஜ்குமார் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story