நடன நிகழ்ச்சியில் தவறி விழுந்து நடிகை படுகாயம்


நடன நிகழ்ச்சியில் தவறி விழுந்து நடிகை படுகாயம்
x
தினத்தந்தி 20 Aug 2019 3:30 AM GMT (Updated: 2019-08-20T06:32:20+05:30)

தமிழில் எஸ்.ஜே.சூர்யாவின் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தவர் ஸ்ரத்தா ஆர்யா. தமிழ், மலையாள மொழிகளில் வெளியான வந்தே மாதரம் படத்திலும் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஸ்ரத்தா ஆர்யா தற்போது டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ‘நாச் பலியே’ என்று டி.வி ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்கிறார்.

இதன் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். ஸ்ரத்தா ஆர்யா சக நடிகர் ஆலமுடன் இணைந்து நடனம் ஆடும் காட்சியை படமாக்கினர். ஸ்ரத்தா ஆர்யாவை ஆலம் தலைகீழாக தூக்கி வைத்து இருப்பதுபோன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆலமின் கை நழுவி ஸ்ரத்தா ஆர்யா தரையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சில நொடிகளில் மயங்கி விட்டார். தலைகீழாக விழுந்து தலையில் அடிபட்டதால் படப்பிடிப்பு குழுவினர் என்ன ஆனதோ? என்ற பயத்தில் பதறினார்கள். உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தார். இதுகுறித்து ஸ்ரத்தா ஆர்யா கூறும்போது, “பெரிய விபத்தில் இருந்து தப்பி இருக்கிறேன். ஆலமின் கைநழுவியதால்தான் கீழே விழுந்து விட்டேன். பயிற்சியில் சரியாகத்தான் ஆடினோம். நடுவர்கள் முன்னால் ஆடும்போது தடுமாறி விழுந்து விட்டேன்.” இவ்வாறு ஸ்ரத்தா ஆர்யா கூறினார்.

Next Story