புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..


புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
x
தினத்தந்தி 25 Aug 2019 3:00 AM GMT (Updated: 2019-08-23T13:46:37+05:30)

வளர்ந்து வரும் தென்னிந்திய நடிகைகளில் புன்னகைக்கு பெயர்பெற்றவராக இருப்பவர், நமிதா பிரமோத். 23 வயதான இவர் மலையாளத்தில் கால் ஊன்றி, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறார்.

நமிதா பிரமோத்திடம் காதல் அனுபவங்களை கேட்டால் அதற்கும் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு, “காதல் என்று சொல்லிக்கொள்ள என் வாழ்க்கையில் எதுவுமே இல்லை. சில வருடங்களில் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் அது ‘அரேஞ்டு மேரேஜ்’ ஆகவே இருக்கும்.

பலரும், நான் திருமண பருவத்தை அடைந்த பின்பும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதாக நினைக் கிறார்கள். நான் 1996-ம் ஆண்டு பிறந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடிக்கத் தொடங்கினேன். இப்போது நடிக்க வந்திருக்கும் கதாநாயகிகளில் பலரும் என்னைவிட வயது அதிகமானவர்கள். எனது பெற்றோர் இப்போதும் என்னை சிறுமியாகத்தான் பார்க் கிறார்கள். அதனால் அவர்கள் எனது திருமணத்தை பற்றி இதுவரை என்னிடம் பேசியதில்லை. எனது பாட்டிதான் அடிக்கடி, ‘நான் கண்களை மூடும்முன்பே பேத்தியின் திருமணத்தை பார்த்துவிடவேண்டும்’ என்று என் அம்மாவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறார். நான் என் பாட்டியிடம் ‘கல்யாணம்.. கண்மூடுதல்.. இந்த இரண்டையும் தவிர வேறு என்ன வேண்டும் சொல் பாட்டி..?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்கிறார்.

நமிதா சிறுவயதிலே சினிமாவிற்கு வந்து நாயகியாகி, பெண்களையே பொறாமைப்படவைத்தவர் என்று சொல்லலாம். அது பற்றி கேட்டபோது..“நான் திரைக்கு வர அதிர்ஷ்டம்தான் காரணம். எனது பெரியப்பா குமரகம் ரகுநாத் நடிகர். ஆனாலும் எங்கள் வீட்டில் ஒருபோதும் சினிமாவை பற்றிய பேச்சே எழுந்ததில்லை. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது புராண தொடர் ஒன்றில் அம்மனாக தோன்றினேன். அப்படியே தொடர்ந்து நடித்து ‘புதிய திரங்கள்’ படத்தில் கதாநாயகியானேன். அப்போதே சமூக வலைத்தளங்கள் இருந்திருந்தால் நான் எனது படங்களை எல்லாம்போட்டு நிறைத்திருப்பேன். இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அப்போது இல்லாமல் போனது சற்று வருத்தம்தான்..” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

‘நமிதா என்ற பெயரை நினைத்தாலே அழகான சிரிப்பு தான் நினைவுக்கு வருகிறது. மயக்கும் உங்கள் சிரிப்பில் இருக்கும் ரகசியம் என்ன?’ என்று கேட்டால்..“குறிப்பிடும்படியாக எனது அழகு ரகசியம் ஒன்றும் இல்லை. எல்லா வீடுகளிலும் என்னை போன்ற பருவப் பெண்கள் அழகுக்காக என்ன செய்வார்களோ அதையே நானும் செய்கிறேன். தயிர், கடலைப்பருப்பு மாவு, சிறுபயறு பருப்பு மாவு போன்றவைகளை பூசி குளிக்கிறேன். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் மசாஜ் செய்வேன். நான் எவ்வளவு சாப்பிட்டாலும் 58 கிலோ எடையை தாண்டமாட்டேன். அதனால் உணவுக்கட்டுப்பாடு எல்லாம் எனக்கு கிடையாது.

சிரிப்பு எனக்கு அம்மாவிடம் இருந்து கிடைத்தது. அம்மா ரொம்ப அழகு. தனது அம்மாக்கள் ரொம்ப அழகாக இருப்பதை சொல்லவே பலபெண்கள் தயங்கு கிறார்கள். ஆனால் அம்மா அழகாக இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. குடும்பத்தில் நான், எனது தங்கை, அம்மா, அப்பா அனைவருமே அழகாக தோன்ற விரும்புகிறோம். அம்மா சுடிதார் அணியாமல், ஜீன்- டாப் போன்றவைகளை அணிந்து கலக்கவேண்டும் என்று நாங்கள் அம்மாவிடம் சொல்வோம். எனது தந்தைக்கு தேவையான உடைகளை நான்தான் தேர்வு செய்துகொடுப்பேன். என் பெற்றோர் எப்போதும் சூப்பராக தோன்றவேண்டும் என்பது என் ஆசை. குடும்பத்திற்கு வெளியே எனக்கு நண்பர்கள் குறைவு. ஷூட்டிங் முடிந்து வெளியே செல்லும் வழக்கம் எல்லாம் கிடையாது.

இப்போது நான் ‘மார்கம்களி’ ‘அல் மல்லு..’ போன்ற மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம். நிறத்தைவைத்து மனிதர்களின் தரத்தைப் பிரிக்கும் எண்ணம்கொண்ட மனிதர்களுக்கு சரியான பதிலடியாக அந்த சினிமா இருக்கும்” என்கிறார்.

பலரும் என்னிடம், உங்களுக்கு ஷாப்பிங் பிடிக்குமா? நடனம் பிடிக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் எனக்கு வீட்டில் உட்கார்ந்திருப்பதுதான் ரொம்ப பிடிக்கும்.

‘ஐந்து வருடங்கள் கழித்து நீங்கள் எப்படி இருப்பீர்கள்?’ என்ற கேள்வி என்முன்னால் வைக்கப்படுகிறது. அப்போது எனக்கு திருமணம் நடந்திருக்கும். இதைவிட சிறந்த கதாபாத்திரங்கள் சிலவற்றில் நடித்திருப்பேன். திருமணத்திற்கு பின்பு நடிப்பதை நிறுத்திவிட்டு, பிசினஸ் தொடங்கியிருப்பேன். எனது தாயாரைப் போன்று சிறந்த குடும்பத்தலைவியாக இருக்க ஆசைப்படுகிறேன். குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கவேண்டும்..” என்று தனது அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்தை அழகாக விவரிக்கிறார், நமிதா.

Next Story