தவறாக நடக்க ரூமுக்கு அழைத்தார் தமிழ் பட இயக்குனர் மீது வித்யாபாலன் புகார்


தவறாக நடக்க ரூமுக்கு அழைத்தார் தமிழ் பட இயக்குனர் மீது வித்யாபாலன் புகார்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 8:10 PM GMT)

தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை வித்யாபாலன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மறைந்த சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து தமிழிலும் இப்போது அறிமுகமாகி உள்ளார்.

இந்த நிலையில் சினிமா வாழ்க்கை பற்றி வித்யாபாலன் அளித்துள்ள பேட்டியில் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் சென்னையில் இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது. அப்போது ஒரு இயக்குனர் என்னை சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்று அவரிடம் கூறினேன். அந்த இயக்குனரோ ரூமுக்கு சென்று பேசலாம் என்று வற்புறுத்தினார். என்னை அறைக்கு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தார்.

ரூமுக்கு சென்றதும் கதவை திறந்து வைத்தேன். இதனால் ஐந்து நிமிடத்தில் அவர் கிளம்பி சென்று விட்டார். ஆரம்ப காலத்தில் தென்னிந்திய பட உலகம் என்னை பலதடவை நிராகரித்து இருக்கிறது. வாய்ப்பு தராமல் ஒதுக்கினர். நான் நடிக்க ஆரம்பித்த பிறகு கூட ஒரு தமிழ் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். எனது பெற்றோருடன் அந்த படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றேன்.

அந்த தயாரிப்பாளர் எனது முகத்தோற்றத்தை கேவலமாக பேசி அவமானப் படுத்தினார். அந்த புறக்கணிப்பில் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. பல நாட்களாக கண்ணாடியே பார்க்க வில்லை. அந்த தயாரிப்பாளரை மன்னிக்கவே மாட்டேன். இப்போது என்னையே எனக்கு பிடிக்கிறது.”

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Next Story