குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 1 Sep 2019 4:43 AM GMT (Updated: 1 Sep 2019 4:43 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.

குருவியாரே, கே.பாலாஜி தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்து இருக்கிறாரா? தேவர் பிலிம்ஸ் படத்தில் சிவாஜிகணேசன் நடித்து இருக்கிறாரா? (கணபதிராஜ், சென்னை)

கே.பாலாஜி தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவாஜிகணேசன் நடிக்கவில்லை!

***

தமிழச்சியான சாய்பல்லவி 3 தமிழ் படங்களில் மட்டும் நடித்தார். அதற்குள் காணாமல் போய்விட்டாரே...இனி அவர் அவ்வளவுதானா? (எம்.புகாரி, கோவை)

சாய்பல்லவிக்கு தமிழில்தான் படங்கள் இல்லை. தெலுங்கிலும், மலையாளத்திலும் நிறைய பட வாய்ப்புகள் உள்ளன. இப்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு பேய் ஓட்ட தெரியுமாமே...இதுவரை அவர் எத்தனை பேய்களை ஓட்டியிருக்கிறார்? (டி.சசிகுமார், ராணிப்பேட்டை)

அவருக்கு படத்தில் மட்டுமே பேய் ஓட்ட தெரியுமாம். நிஜத்தில் பேயை கண்டால், பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க ஓடிவிடுவாராம்!

***

சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட ரோஜா அரசியலில் எப்படி, ஜெயிப்பாரா? (எஸ்.தாமஸ், சேலம்)

அரசியலில் ஈடுபட்டபின், ரோஜாவுக்கு வெற்றி மேல் வெற்றி. சினிமாவை விட அரசியலில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது!

***

குருவியாரே, பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வந்த டைரக்டர் டி.பி.கஜேந்திரன் அடுத்து ஏதாவது ஒரு படத்தை இயக்குகிறாரா, இல்லையா? (மே.சக்திவேல், கடலூர்)

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்கள் இப்போது நிறைய தயாராகி வருகின்றன. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு டி.பி.கஜேந்திரனும் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு புதிய படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்!

***

‘அசுரன்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பாரா? (ஆர்.வி.விஜயன், புதுக்கோட்டை)

அவருக்கு பொருந்துகிற மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் மட்டும் நடிப்பாராம்!

***

குருவியாரே, ‘கோமாளி’ படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார்? (கே.சுந்தரமூர்த்தி, மதுரை)

ஜெயம் ரவி, ஒரே சமயத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை லட்சுமண் டைரக்டு செய்கிறார். இன்னொரு படத்தை அகமது இயக்குகிறார்!

***

சோனியா அகர்வால் எங்கே போனார், என்ன ஆனார், அவர் படங்களில் நடிக்கிறாரா, இல்லையா? (ஜே.வி.அஸ்வின், நாகர்கோவில்)

தமிழ் பட வாய்ப்பு இல்லாததால், சோனியா அகர்வால் பிற மொழி படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இப்போது அவர் ஒரு போஜ்புரி படத்தில் நடிப்பதாக தகவல்!

***

குருவியாரே, விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முருகதாஸ் விருப்பமாக இருக்கிறார்? (வி.ஜேஸ்மின் ஜெயராஜ், அருப்புக்கோட்டை)

‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் ஆர்வமாக இருக்கிறார்!

***

இங்கே இளையராஜாவும் அவருடைய மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்ராஜா ஆகிய மூவரும் இசையமைப்பாளர்களாக இருப்பது போல் வேறு எந்த மொழி பட உலகிலாவது அப்பாவும், மகன்களும் இசையமைப்பாளராக இருக்கிறார்களா? (எஸ்.ஜவகர், ஊட்டி)

இந்தி பட உலகில் எஸ்.டி.பர்மன், அவருடைய மகன் ஆர்.டி.பர்மன் ஆகிய இருவரும் இசையமைப்பாளர்கள்தான்!

***

குருவியாரே, நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகிய மூன்று பேரில் யாருக்கு இயற்கையான கூந்தல்? யாருக்கு செயற்கை கூந்தல்? (வெ.அன்புக்கரசு, மேட்டூர்)

மூன்று பேருமே செயற்கை கூந்தலைத்தான் பயன்படுத்துகிறார்கள்!

***

நகைச்சுவை நடிகர் சார்லிக்கு எத்தனை பிள்ளைகள்? (சா.லியாகத் அலிகான், உடுமலைப்பேட்டை)

சார்லிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படம் எப்போது வெளிவரும்? (கே.ஆர்.ரவீந்திரன், சென்னை–1)

‘இந்தியன்,’ ‘தலைவன் இருக்கிறான்’ ஆகிய 2 படங்களையும் முடித்துக் கொடுத்து விட்டு, அதன்பிறகு ‘சபாஷ் நாயுடு’ பட வேலையில், கமல்ஹாசன் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

***

ஆனந்தராஜ் இப்போது அதிக படங்களில் நடிப்பதில்லையே, ஏன்? (எஸ்.ராமகிருஷ்ணன், கரூர்)

ஆனந்தராஜ் அரசியல் கட்சியில் இருப்பதால் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறாராம்!

***

குருவியாரே, இப்போது உள்ள நடிகைகளில், மிக அழகான நடிகை யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ஒப்பனை இல்லாமலா? அல்லது ஒப்பனைக்கு பிறகா?

***

சிம்பு இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

‘மன்மதன்,’ ‘வல்லவன்’ ஆகிய 2 படங்களை சிம்பு இயக்கியிருக்கிறார்!

***

குருவியாரே, பெரும்பாலான நடிகைகள் வயதான கோடீஸ்வரர்களை அல்லது ஏற்கனவே திருமணம் ஆனவர்களை திருமணம் செய்து கொள்வது ஏன்? (பி.ஆனந்த், திருச்செங்கோடு)

வாழ்க்கையில் வசதியாக இருப்பவர்களையும், அனுபவப்பட்டவர்களையும் திருமணம் செய்து கொண்டால், பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம்!

***

ஆர்.கே.செல்வமணி இயக்கிய படங்களில் அதிக நாட்கள் ஓடிய படங்கள் எவை? (தனபால், ஓவரூர்)

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி ஆகிய மூன்று படங்களும் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தன.

***

குருவியாரே, தமன்னா, ‘பாகுபலி’ புகழ் பிரபாசை புகழ்ந்து தள்ளுகிறாரே, ஏன்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள் புரம்)

வலையை வீசி பார்க்கலாம். சிக்கினால் சரி. சிக்காவிட்டாலும் சரி...என்ற ‘பரந்த’ மனப்பான்மைதான் காரணம்!

***

இசையமைப்பாளர் தேவா இப்போது படங்களுக்கு இசையமைக்கிறாரா, இல்லையா? (சந்தோஷ், கன்னியாகுமரி)

தேவா கைவசம் 3 புது படங்கள் உள்ளன. அந்த படங்களுக்கு இசையமைக்கும் பணியை அவர் செய்து வருகிறார்!

***

Next Story