விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்; ரஜினி மகள் சவுந்தர்யா வருத்தம்


விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்; ரஜினி மகள் சவுந்தர்யா வருத்தம்
x
தினத்தந்தி 6 Sep 2019 11:30 PM GMT (Updated: 6 Sep 2019 9:56 PM GMT)

ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விசாகனும் லண்டன் சென்றனர். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியபோது விசாகன் பாஸ்போர்ட் திருட்டு போய் இருந்தது.

விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள்.

விசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார் என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

“கடந்த 1-ந்தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர். இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது.

அதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”

இவ்வாறு சவுந்தர்யா கூறியுள்ளார்.

Next Story