மலையாளத்தில் எதிரொலித்த சுபஸ்ரீ சம்பவம் மம்முட்டி படத்துக்கு பேனர் வைப்பது நிறுத்தம்


மலையாளத்தில் எதிரொலித்த சுபஸ்ரீ சம்பவம் மம்முட்டி படத்துக்கு பேனர் வைப்பது நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:30 PM GMT (Updated: 18 Sep 2019 5:26 PM GMT)

கேரளாவில் திரைக்கு வர உள்ள மம்முட்டியின் ‘ஞானகந்தர்வன்’ படத்துக்கு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ, பேனர் விழுந்து பலியான சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் இனிமேல் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளன. நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரும் ரசிகர்கள் பேனர்கள் வைக்க தடை விதித்துள்ளனர். சென்னையில் இன்று விஜய்யின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழா பேனர்கள் இல்லாமலேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோல் அஜித் ரசிகர்களும் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த பேனர்களையும் அகற்றி வருகிறார்கள்.

தற்போது மலையாள பட உலகிலும் இது எதிரொலித்து உள்ளது. சுபஸ்ரீ மரணம் பற்றி கேள்விப்பட்ட மலையாள தயாரிப்பாளர் ரமேஷ் பிஷ்ரோட் திரைக்கு வர உள்ள மம்முட்டியின் ‘ஞானகந்தர்வன்’ படத்துக்கு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளார். இதற்கு மலையாள பட உலகில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து மலையாள தயாரிப்பாளர் சி.எச்.முகமது கூறும்போது, “படங்களுக்கு பேனர்கள் வைக்க அதிக செலவுகள் ஆகிறது. நான் ஒரு படத்துக்கு பேனர்களுக்காக மட்டும் ரூ.30 லட்சம் செலவிடுவேன். இப்போது மம்முட்டி படத்துக்கு பேனர் வைப்பது இல்லை என்று முடிவு எடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் இதை பின்பற்ற வேண்டும்” என்றார்.

Next Story