என்றென்றும் கண்ணதாசன் :ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்த படம்


என்றென்றும் கண்ணதாசன் :ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்த படம்
x
தினத்தந்தி 20 Sep 2019 11:55 AM GMT (Updated: 20 Sep 2019 11:55 AM GMT)

அப்பாவின் மிக நெருங்கிய நண்பர், முகமது யாசின் என்ற தொழிலதிபர். அப்பா ‘முதலாளி’ என்று அழைக்கும் மூன்று பேரில் இவரும் ஒருவர். பல்வேறு தொழில்களுடன் சினிமா விநியோகஸ்தராகவும், பைனான்சியர் ஆகவும் இருந்தார். அவருக்கு அப்பாவின் மேல் ஒரு ஆதங்கம் உண்டு.

“கண்ணதாசன் எவ்வுளவு சம்பாதித்தாலும் அதை அப்படியே செலவு செய்து விடுகிறார். பிள்ளைகளுக்கு என்று அவர் எதையும் சேர்த்து வைக்கவில்லை” என்று வருத்தப்படுவார்.

அதனால் ஒரு முறை அவர் புதிதாக தொடங்க இருந்த ஒரு நிறுவனத்தில் அப்பாவை பங்குதாரராக்க நினைத்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் அப்பாவுக்கு உறவினர் ஒருவராலும், பங்குதாரர்களாலும் ஏகப்பட்ட பிரச்சினையால், தினமும் கோர்ட்டு.. கேஸ்.. என்று இருந்த நேரம்.

இதன் காரணமாக யாசின் முதலாளி தனது புதிய நிறுவனத்தில் கண்ணதாசனின் இரண்டு மனைவியரையும் பங்குதாரர் ஆக்கிவிட்டார். அப்பாவிடம் பேசி பத்தாயிரம் ரூபாயை மூலதனமாக போட வைத்துவிட்டார்.

இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து அப்பாவுக்கு கோர்ட்டில் பணம் கட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சற்றும் யோசிக்காமல் யாசின் அவர்களுக்கு போன் செய்து “முதலாளி.. ஒரு பெரிய பிரச்சினை.. கோர்ட்டுல பணம் கட்டணும்.. என் மனைவிகளை பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலக்கி, அந்த பங்குப் பணத்தை தந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

அதற்கு யாசின் “அது அப்படியே இருக்கட்டும். நான் அந்தப் பணத்தை கடனாகத் தருகிறேன். பிறகு திருப்பித் தாருங்கள்” என்றார்.

“வேண்டாம் முதலாளி, திரும்பவும் இது ஒரு கடனா சேர்ந்திடும்.”

யாசின் முதலாளி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அப்பா அந்தப் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு விட்டார். இன்றைக்கும் அந்த நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

கண்ணதாசன் இப்படித்தான் என்று முடிவு செய்து, அவரும் அவ்வப்போது அப்பாவுக்கு பணம் சம்பாதிக்க பல யோசனைகள் சொல்லுவார்.

ஒருமுறை அப்பாவுக்கு போன் செய்து “நேத்து பாம்பேல ஒரு இந்திப் படம் பாத்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. தமிழ்ல எடுக்க உரிமைக்கு சொல்லி வச்சு இருக்கேன். நீங்க அந்தப் படத்தை பாருங்கள், உங்களுக்கு பிடிச்சு இருந்தா நான் பேசித்தரேன். நீங்க எடுத்தா எடுங்க. இல்லைன்னா வேற யாருக்காவது கைமாத்தி விடுங்க. உங்களுக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்கும்” என்று சொன்னார்.

“சரி.. அந்தப் படத்தை எங்க பாக்கிறது? பாம்பே போகணுமா?”

“வேண்டாம், நான் விசாரிச்சுட்டேன். பெங்களூருல ஓடிக்கிட்டு இருக்கிறதா சொன்னாங்க. படத்தோட பேரு “விக்டோரியா 203”

பேசி முடித்து போனை வைத்த அப்பா எங்களை அழைத்தார். “டேய்... யார் யாருக்கு லீவு?” என்று கேட்டார். அது அரை பரீட்சை லீவு என்று ஞாபகம்.

நான்கு பேர் “எனக்கு லீவு” என்று சொன்னோம்.

உடனே தனது பெரியப்பா மகனும், உதவியாளருமான இராம.முத்தையாவை அழைத்து, “டேய் முத்து, உடனே பிள்ளைகளை அழைச்சுகிட்டு பெங்களூரு போய் அங்க ‘விக்டோரியா 203’ன்னு ஒரு படம் ஓடுதாம். அதை பார்த்திட்டு வாங்க” என்றார்.

நாங்கள் பள்ளிக்கு போக, கண்ணதாசன் நாடகக்குழு பிரச்சாரத்திற்குப் போக, ஷூட்டிங் வேலைகளுக்காக என்று வீட்டில் எம்.எஸ்.டபிள்யூ 7884 என்ற வில்லிஸ் ஜீப் வேன் ஒன்று இருக்கும்.

அதை வெங்கடாசலம் என்ற டிரைவர் ஓட்ட, முத்து அண்ணன், சகோதரர்கள் நாங்கள் நான்கு பேர், எங்களைப் பார்த்துக்கொள்ள தர்மலிங்கம் என்ற வேலையாள் என நாங்கள் அனைவரும் அந்த வேனில் பெங்களூருக்கு கிளம்பினோம். மாலை பெங்களூரு போய் சேர்ந்தோம்.

அப்பாவிடம் ஒரு சமயம் பதினான்கு டிரைவர்கள் வேலை பார்த்தனர். அதில் ஒருவர் மாணிக்கம் அண்ணன். கன்னடக்காரர். அவர் வேலையை விட்டுவிட்டு பெங்களூருவில் தொழில் தொடங்கி வசதியாக வாழ்ந்து கொண்டு இருந்தார்.

நாங்கள் வருவது தெரிந்ததும் “என் முதலாளி பிள்ளைகள் வந்திருக்கு” என்று தன் வீட்டில் இருந்து கறி, மீன், கோழி என்று சமைத்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

பிறகு அவருடன் பெங்களூருவில் எந்த தியேட்டரில் விக்டோரியா 203 ஓடுகிறது என்று மறுநாள் முழுவதும் சுற்றினோம். எங்கேயும் அந்தப் படம் ஓடவில்லை.

பின்னர் மாணிக்கம் அண்ணன் தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு, கோலார் என்னும் ஊரில் இருக்கும் ஒரே ஒரு தியேட்டரில் விக்டோரியா 203 ஓடுவதாக சொன்னார்.

மறுநாள் காலையில் பத்து மணிக்கெல்லாம் நாங்கள் கோலார் வந்துவிட்டோம். அங்கு விக்டோரியா 203 ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் மாலை 6 மணி காட்சி மட்டும்தான். பகல் முழுக்க ஊர் சுற்றி விட்டு மாலையில் படம் பார்த்தோம்.

சாயிரா பானு, நவீன் நிக்சல் நடித்த படம். சாயிரா பானு மிக மிக கவர்ச்சியாக நடித்திருப்பார். படம் நன்றாக இருந்தது. படத்தை பார்த்து முடித்து பெங்களூரு திரும்பி, முத்து அண்ணன் அப்பாவிடம் படம் நன்றாக இருப்பதாக சொன்னார். அப்பா எங்கள் ஒவ்வொருவரிடமும் படத்தை பற்றி விசாரித்து விட்டு, “நாளைக்கு திரும்பவும் போய் படத்தை பார்த்துவிட்டு அப்படியே மெட்ராஸ் வந்திடுங்க” என்றார். நாங்களும் மறுநாள் அந்தப் படத்தை பார்த்துவிட்டு மெட்ராஸ் வந்தோம்.

ரெண்டு தடவை அந்தப் படத்தை பார்த்தீங்களே படம் போர் அடிக்கலையா? என்று அப்பா கேட்டார்.

‘இல்லை’ என்று சொன்னோம்.

உடனே யாசின் முதலாளிக்கு போன் செய்து, பிள்ளைகளுக்கு அந்தப் படம் பிடிச்சு இருக்கு. அந்தப் படத்தை வாங்கிடலாம்” என்றார்.

யாசின் அவர்களும் தயாரிப்பாளர்களுடன் பேசி படத்தின் தமிழ் உரிமையை அப்பாவுக்கு வாங்கித் தந்தார்.

அப்பாவிடம் அந்தப் படத்தின் தமிழ் உரிமை இருப்பதை கேள்விப்பட்டு பலபேர் வந்து விலைக்கு கேட்டார்கள். ஒரு கணிசமான லாபத்திற்கு அந்தப் படத்தின் உரிமைகளை அப்பா விற்றுவிட்டார்.

விக்டோரியா 203 என்ற அந்தப் படம் தமிழில் “வைரம்” என்ற பெயரில் தயாரானது. ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்தார்கள்.

இந்தியில் சாய்ராபானு போலவே தமிழில் ஜெயலலிதா மிகவும் கவர்ச்சியாக நடித்து இருந்தார். இந்தப் படம் மட்டும்தான் அவர் இவ்வளவு கவர்ச்சியாக நடித்த படம்.

ஒரு முறை அப்பா ஒரு இலக்கிய கூட்டத்திற்காக மலேசியா, சிங்கப்பூர் போனார். அவர் போவது தெரிந்து யாசின் அப்பாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். “சிங்கப்பூர்ல நான் சொல்ற கடைக்குப் போங்க, அங்க ‘நாகரா’ என்று ஒரு ஒலிப்பதிவு கருவி கிடைக்கும். அதை வாங்கிக்கிட்டு வாங்க” என்றார்.

அப்பாவும் அவர் சொன்ன கடைக்குப் போய் அந்தக் கருவியை வாங்கிக் கொண்டு வந்தார்.

யாசின் அவர்கள் தான் சின்னப்ப தேவர், பாலாஜி ஆகியோருக்கு பைனான்சியர். அவர் பாலாஜியிடம் அப்பா வாங்கி வந்த நாகரா பற்றி சொல்லி, அதை அவருக்கு விற்று விடச் செய்தார். இதிலும் அப்பாவுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்தது.

அப்பா காலத்திற்குப் பிறகும் கூட யாசின் அவர்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினருக்குமான உறவு கடவுளின் அருளால் இன்றும் தொடருகிறது.

வேட்டி கட்டும் அழகு...

அப்பா வேட்டி கட்டும் அழகே தனி. அம்மாபேட்டை நெசவாளர் சங்கத்தில் இருந்து விசேஷமாக செய்யப்பட்ட 9 முழம் வேட்டியைத்தான் கட்டுவார். அதை கட்டும் விதமே தனி.

நான் திரை உலகிற்கு வந்து 35 வருடங்கள் ஆகின்றன. இது வரையில் அப்பா வேட்டி கட்டும் பாணியில் யாரும் வேட்டி கட்டிப் பார்த்தது இல்லை. வெளிப்பார்வைக்கு அது வழக்கமானது போல தெரிந்தாலும், உள்ளே விசிறி போல மடிப்புகள் இருக்கும். எந்த வெளிச்சத்தில் நின்றாலும் வெளிச்சம் உள்ளே ஊடுருவாது. மேடையில் நிற்கும்போது பலருக்கு கால்களின் வடிவம் வேட்டியின் ஊடே தெரிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அப்பாவுக்கு அந்த தர்மசங்கடம் எழாமல் இருந்ததற்கு அவர் வேட்டி கட்டும் முறைதான் காரணம்.

அப்பா தினமும் வெளியே கிளம்பும்போது, அவரது அறை வாசலில் கிடக்கும் அவரது செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்புவார்.

அது என்ன ஏது என்று தெரியாது. வாங்கி ஒரு வருடம் ஆனாலும் அவரது செருப்பு புதிதாகவே இருக்கும். வீடு, கம்போஸிங்க், மீட்டிங் என்று மாறி மாறி காரிலேயே போய்க்கொண்டிருந்ததால், செருப்பு தேய்ந்ததே இல்லை.

அம்மா தான், செருப்பு வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது மாற்ற வேண்டும் என்று சொல்லி, அப்பாவின் உதவியாளர் வசந்தனை வாங்கி வரச் செய்வார்கள். அந்த புது செருப்பை அவரது அறை வாசலில் போட்டுவிட்டு, பழைய செருப்பை என்னிடம் அல்லது என் சகோதரரிடம் தந்து விடுவார்கள்.

அப்பா வெளியே கிளம்பும்போது வழக்கம்போல பழைய செருப்பை தேடுவார்கள். புது செருப்பு வாங்கியிருக்கிறேன் என்று அம்மா சொன்ன பிறகுதான் அதை போட்டுக்கொண்டு கிளம்புவார்கள்.

ஈ.வி.கே.சம்பத்

சம்பத் அவர்கள் மீது அப்பாவுக்கு அபார மரியாதை. தன் உடன் பிறந்த சகோதரர்களை விட அவரை அதிகமாகவே நேசித்தார் அப்பா.

சம்பத், தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்த பிறகு, அப்பாவும் அவரும் பல நேரங்களில் ஒன்றாகத்தான் இருப்பார்கள். அண்ணாவிடம் இருந்த பாரபட்சம் சம்பத்திடம் சிறிதளவும் இருந்ததில்லை என்பது அப்பாவின் தீர்மானம்.

சம்பத்தின் மகன் இனியன் சம்பத்தும், நானும் பள்ளித் தோழர்கள். அப்போது அவர்கள் குடும்பம் தி.நகரில் ஹபிபுல்லா சாலையில் டி.ஆர்.ராஜகுமாரி வீட்டின் பின்புறம் குடியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை மாலையில் நான் அங்கு போனால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தான் வீடு திரும்புவேன். சம்பத்தின் பிள்ளைகள் கவுதமன், மதி, இளங்கோ, இனியன் எல்லோரும் ஒன்றாக விளையாடிய அந்தக் காலங்கள் பொன்னானவை.

பின்னர் சம்பத்துக்கும் அப்பாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். ஆனாலும் அவர் மீது இருந்த மரியாதை அப்படியே இருந்தது என்பது, சம்பத் இறந்த போது அப்பா அழுததை பார்த்த போதுதான் தெரிந்தது.

நான் அவர் பிள்ளைகளுடன் நெருக்கம் என்பதால் என்னை அழைத்து கண்ணீருடன், “டேய் துரை, சம்பத் அண்ணன் செத்து போயிட்டாரு” என்று சொன்னது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

-தொடரும்.

Next Story