நீச்சல் உடையில் நடிக்க மறுத்த பிரியாமணி


நீச்சல் உடையில் நடிக்க மறுத்த பிரியாமணி
x
தினத்தந்தி 23 Sep 2019 12:05 AM GMT (Updated: 2019-09-23T05:35:38+05:30)

தமிழில் ‘கண்களால் கைது செய்’ படத்தில் அறிமுகமான பிரியாமணிக்கு பருத்தி வீரன் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் வந்தார்.

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான மனவூரி ராமாயணம் படத்தில் விலைமாதுவாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார்.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:-

“எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. நிறைய இந்தி கதாநாயகிகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். என்னால் அப்படி நடிக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன்.

அதற்கு விமர்சனங்கள் கிளம்பின. தென்னிந்திய ரசிகர்கள் பாரம்பரிய உடைகளில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை. அங்கு கவர்ச்சியாக நடிக்கின்றனர். எனக்கு அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Next Story