தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்


தலை முடியை நீளமாக வளர்த்து  பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்
x
தினத்தந்தி 23 Sep 2019 12:11 AM GMT (Updated: 23 Sep 2019 12:11 AM GMT)

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்குனர் மணிரத்னம் படமாக எடுக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராகிறது.

‘பொன்னியின் செல்வன்’  இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. தாய்லாந்தில் உள்ள காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி கதாநாயகர்களிடம் மணிரத்னம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சரித்திர காலத்து கதை என்பதால் மன்னர் உள்பட அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்கும் தலை முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதன்படி நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

Next Story