திப்புசுல்தான் வரலாற்றை படமாக்கவில்லை; கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை எதிர்ப்பதா? பட நிறுவனம் கண்டனம்


திப்புசுல்தான் வரலாற்றை படமாக்கவில்லை; கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தை எதிர்ப்பதா? பட நிறுவனம் கண்டனம்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:15 PM GMT (Updated: 26 Sep 2019 5:40 PM GMT)

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தை தயாரிக்கும் டிரீம் வாரியர் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை மலைக்கோட்டையில் எடுக்க கூடாது என்றும் கூறி ஒரு அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் இருவேறு அமைப்புகள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பது வருத்தத்துக்குரியது.

இது வரலாற்று பின்னணியோ அல்லது திப்புசுல்தான் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படமோ அல்ல. சமீப காலமாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும் சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கை குழு உள்ளது.

படத்தில் எதை காண்பிக்க வேண்டும் என்ற உரிமை படைப்பாளிகளுக்கு உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் உரிமையும் பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனிநபரோ படைப்பாளிகள் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும், வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கு எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story