சினிமா செய்திகள்

வெளியாகும் முன்பே பட்ஜெட்டை வசூல் செய்த ‘சைரா’ + "||" + Saira, already made a budget collection

வெளியாகும் முன்பே பட்ஜெட்டை வசூல் செய்த ‘சைரா’

வெளியாகும் முன்பே பட்ஜெட்டை வசூல் செய்த ‘சைரா’
‘சைரா நரசிம்மரெட்டி’ படம் வெளியாவதற்கு முன்பாகவே பட்ஜெட் தொகையை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து, 41-வது ஆண்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி, இன்றளவும் நடிப்பிலும், இளம் தலைமுறை நடிகர்களுக்கே சவால்விடும் வகையில் நடனத்திலும் ஜொலித்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவரை திரையில் பார்க்கும்போது, அவரது 60 வயதை தெரியப்படுத்தும் விதமாக ஒரு காட்சியைக் கூட நாம் பார்க்க முடியாது. அப்படி ஒரு இளமை ததும்பும் குறும்புடன் சுறுசுறுப்பாக நடிப்பவர் சிரஞ்சீவி.

சினிமாத்துறையில் நல்லநிலையில் இருக்கும்போதே, அரசியல் கட்சி தொடங்கினார். அரசியல் பணி காரணமாக 10 ஆண்டுகள் அவரால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு விலகியவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘கைதி-150’ என்ற படத்தின் மூலமாக மீண்டும் சினிமாத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் அடைந்த அதிரிபுதிரி வெற்றி, அவரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் இன்னும் தலையில் வைத்து கொண்டாடுவதையும், தெலுங்கு திரையுலகில் அவருக்கு இருக்கும் வரவேற்பையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

அந்த வெற்றி தந்த உற்சாகத்தில், பிரமாண்டமான ஒரு கதையில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தார். அதன்படி தேர்வு செய்யப்பட்டதே, ‘சைரா: நரசிம்மரெட்டி’ திரைப்படம். இந்தப் படத்தின் கதை, ஆந்திராவில் கி.பி.1800- களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய உய்யலவாடா நரசிம்மரெட்டி என்பவரின் வாழ்க்கைத் சரித்திரம் ஆகும். ‘பாகுபலி’ போன்று பிரமாண்ட படத்தில் நடிக்கும் அதே நேரத்தில், வரலாற்றோடு தொடர்புடைய உண்மைக் கதையில் நடிக்கும்போது, அந்த திரைப்படத்தை இன்னும் நெருக்கமாக மக்களை உணர வைக்க முடியும் என்பதே, சிரஞ்சீவி இந்தப் படத்தை தேர்வு செய்ததற்கான காரணம் என்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தின் கர்னூர் மாவட்டத்தில் அமைந்திருந்த இடம்தான் உய்யலவாடா. இந்தப் பகுதியில் நரசிம்மரெட்டியின் தாத்தா ஜெயராமி ரெட்டியும், தந்தை பெத்தமல்ல ரெட்டியும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். அவர்களின் வாரிசாக வந்த நரசிம்ம ரெட்டி, கிடலூரு என்ற இடத்தில் இருந்த ஆங்கிலேயர்களின் முகாமை தாக்கி, அவர்களை ஓடஓட விரட்டினார்.

இதையடுத்து நரசிம்ம ரெட்டியின் மீது வஞ்சம் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரைப் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால், நரசிம்ம ரெட்டியை நெருங்கக் கூட முடியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் குடும்பத்தாரை விடுவிப்பதற்காக படைகளைத் திரட்டியபடி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார் நரசிம்மரெட்டி. ஆனால் கிராமத்தினர் சிலர் காட்டிக் கொடுத்ததன் விளைவாக, நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயர்கள் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

‘இனி ஒருவன் தங்களை எதிர்க்க பயப்பட வேண்டும்’ என்று நினைத்த ஆங்கிலேயர்கள், நரசிம்ம ரெட்டியை சங்கிலியால் பிணைத்து சித்ரவதை செய்தபடியே ஊர் தெருக்களின் வழியாக இழுத்துச் சென்றனர். நரசிம்ம ரெட்டியோடு இருந்த பலரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சிலர் விடுவிக்கப்பட்டனர். சிலர் 5 முதல் 14 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர். நரசிம்ம ரெட்டி மட்டும் தூக்கில் இடப்பட்டார் என்பதாக அவரது வரலாறு சொல்லப்படுகிறது. இந்தக் கதையை மையப் படுத்தி தான் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் உருவாகி உள்ளது.

இதில் நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். பிரமாண்டமான கதைக் களத்திற்கு மேலும் பிரமாண்டம் சேர்க்கும் வகையிலும், இந்திய அளவில் இந்தப் படத்தை வணிகம் செய்வதற்காகவும், இந்தப் படத்தில் இந்திய சினிமாவின் பல மொழிகளைச் சேர்ந்த உச்சநட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அதன்படி பாலிவுட் உச்சநடிகர் அமிதாப் பச்சன், தமிழ் மொழியின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள  ஜெகபதிபாபு, கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப், நயன்தாரா, தமன்னா, ‘கபாலி’ படத்தில் நடித்த ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதனால் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சுமார் ரூ.300 கோடியில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படம், தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் 2-ந் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. ரசிகர்களிடம் இருந்தும், பொதுவான சினிமா வட்டாரத்தினரிடம் இருந்தும் இந்த டிரைலருக்கு நல்லமுறையிலான வரவேற்பே கிடைத்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூட இந்த படத்தின் டிரைலரை பாராட்டி பேசியிருக்கிறார்.

‘அதனொக்கடே’, ‘அதிதி’, ‘கிக்’, ‘கிக்-2’, ‘ரேஸ்குர்ரம்’ உள்ளிட்ட அதிரிபுதிரியான வெற்றியைப் பெற்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய சுரேந்தர்ரெட்டி, முதன் முறையாக வரலாற்றுக் கதை ஒன்றை கையில் எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்தில் இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்திற்கு செலவிட்ட பட்ஜெட் தொகை வசூலாகிக்கொண்டிருப்பது, அந்தப் படக்குழுவினருக்கு அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

இந்தப் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் தயாரிக்கிறார். சிரஞ்சீவியின் சம்பளம் நீங்கலாக இந்தப் படத்திற்கான பட்ஜெட் சுமார் ரூ.300 கோடி என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு விட்ட நிலையில், இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் வாங்கியிருக்கிறது. அந்தத் தொகை ரூ.125 கோடி என்கிறார்கள். இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் உரிமையை, இதே நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியிருந்ததே அதிகத் தொகைக்கு ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டதாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ‘சைரா’ முறியடித்திருக்கிறது. தவிர இசை உரிமை உள்ளிட்ட மற்ற உரிமைகளும் விற்பனையாகும்போது, படம் வெளியாவதற்கு முன்பாகவே, படத்தின் பட்ஜெட் தொகையான ரூ.300 கோடி வசூலாகிவிடும் என்கிறார்கள். தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்காக தியேட்டர் உரிமை, அதன் மூலம் கிடைக்கும் வசூல் போன்றவை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் கூடுதல் லாபமாகவே இருக்கும்.

இந்த விஷயம் தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இன்னும் படத்திற்கு அதிக விளம்பரம் செய்து, படத்தின் வசூலை பன்மடங்காக பெருக்கு வதற்கான உத்திகளை அவர்கள் கையாண்டு வருகிறார்களாம்.

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு, அதன் பட்ஜெட் தொகையை விட அதிக வசூலை வரவழைத்துக் கொடுப்பது, பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் அந்தப் படம் ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்துகிறது, அது மக்களின் மனதில் எப்படி சிம்மாசனம் போட்டு அமர்கிறது என்பதில்தான், படத்தின் உண்மையான வெற்றி இருக்கிறது.

இந்தியில் 1500 தியேட்டர்

தெலுங்கில் தயாராகி உள்ள ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இதில் பாலிவுட்டில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறதாம். ‘பாகுபலி’ உருவான இடத்தில் இருந்து இன்னொரு பிரமாண்டமான சினிமா வருவதை பாலிவுட் உலகம் உற்றுநோக்குகிறது. சிரஞ்சீவி ஏற்கனவே இந்தியில் ‘பிரதிபாந்த்’, ‘ஆஜ்கா குண்டராஜ்’, ‘தி ஜென்டில்மேல்’ ஆகிய நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். தவிர அவரது 30-க்கும் மேற்பட்ட படங்கள் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதனால் பாலிவுட் ரசிகர்கள் பலரும் சிரஞ்சீவியை அறிந்திருக்கவே செய்வார்கள். மேலும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனும் நடித்திருக்கிறார். இதுவும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனவே ‘சைரா நரசிம்மரெட்டி’ திரைப்படத்தை இந்தியில் 1500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வருமானத்தில் பங்கு

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்ததற்காக சிரஞ்சீவி இதுவரை சம்பளம் வாங்கவில்லையாம். இந்தப் படத்திற்கு அவரது மகன் ராம்சரண்தான் தயாரிப்பாளர் என்றாலும், ஒரு படத்தின் நடிகருக்கு அவருக்குரிய சம்பளத்தைக் கொடுத்துதானே ஆக வேண்டும். எனவே சம்பளம் வாங்காத சிரஞ்சீவிக்கு, படத்தின் வருமானத்தில் ஒரு பங்கை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம், ராம்சரண்.