‘வெப்’ தொடராக காமராஜர் வாழ்க்கை


‘வெப்’ தொடராக காமராஜர் வாழ்க்கை
x
தினத்தந்தி 1 Oct 2019 12:05 AM GMT (Updated: 1 Oct 2019 12:05 AM GMT)

தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுப்பதாகவும் இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது காமராஜர் வாழ்க்கை வரலாறும் வெப் தொடராக தயாராக உள்ளது. ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை 2004-ல் திரைப்படமாக எடுத்து வெளியிட்டனர். அந்த படம் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றது.

இதுபோல் ‘த கிங்மேக்கர்’ என்ற பெயரில் டி.வி தொடராகவும் ஒளிபரப்பானது. தற்போது காமராஜர் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 40 பாகங்களாக இந்த வெப் தொடர் தயாராகிறது. பிரதீப் மதுரம் காமராஜர் வேடத்தில் நடிக்க உள்ளார். ரமணா கம்யூனிகேஷன் தயாரிக்கிறது. பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள காட்சிகளை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து புதிய காட்சிகளையும் படமாக்கி இந்த வெப் தொடர் உருவாக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். காமராஜரின் அரசியல் சுயநலமற்ற அணுகுமுறை, பல தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்திய தன்மை, நிறைவேற்றிய நலத்திட்டங்கள் போன்றவை இந்த வெப் தொடர் மூலம் மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கப்படும் என்று இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Next Story