ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி


ஜோடியாக சினிமாவை இயக்கும் தம்பதி
x
தினத்தந்தி 6 Oct 2019 3:30 AM GMT (Updated: 5 Oct 2019 6:31 AM GMT)

கணவரும், மனைவியும் ஜோடி சேர்ந்து ஒரு மலையாள சினிமாவை இயக்கு கிறார்கள். அந்த படத்தின் பெயர், ஹேப்பி சர்தார். அந்த டைரக்டர் தம்பதியின் பெயர்: சுதீப் ஜோஷி- கீதிகா.

‘ஜோடியாக சினிமாவை இயக்கும் மலையாளத்தின் முதல் தம்பதி’ என்ற பெருமையையும்  இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகன் காளிதாஸ். இவர் பிரபல நடிகர் ஜெயராமின் மகன்.

ஹேப்பி சர்தாரை டைரக்ட் செய்யும் தம்பதிகள் இருவருமே பிரபலமான டைரக்டர்களின் வாரிசுகள். சுதீப்பின் தந்தை ஜோஷி மேத்யூ. இவர் ‘ஒரு கடங்கதை போல’, ‘பத்தாம் நிலையிலே தீவண்டி’ போன்ற சினிமாக்களை இயக்கியவர். கீதிகாவின் தந்தை கே.சி.சந்திரஹாசன். இவர் ‘ஜான்பால் வாதில் திறக்குந்து’ என்ற படத்தை இயக்கியவர். மோகன்லால் நடித்த ‘அதிபன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர்.

“சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நாங்களும் சினிமாவிற்கு வந்துவிட்டோம். நாங்கள் விரும்பியதுபோல், எல்லோரும் குடும்பத்தோடு வந்து மகிழ்ச்சியாக பார்க்கக்கூடிய சினிமாவை இயக்கிக்கொண்டிருக்கிறோம். மணவிழா ஒன்று நடக்கிறது. அதில் இரண்டு கலாசாரங்களை கொண்ட குடும்பத்தினர் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் ஜாலியான விஷயங்களோடு கதை நகர்ந்துசெல்கிறது. கதையை தயார் செய்துவிட்டு, கீதிகாவுடன் படித்த சர்தார் குடும்ப நண்பர் ஒருவரிடம் கதையை சொன்னோம். அவர் கேட்டுவிட்டு மலையாளம் பேசக்கூடிய பஞ்சாப் இளைஞர் ஒருவர் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றார்.

நடிகர் காளிதாசிடம் கதையை சொன்னதும் அவருக்கு பிடித்துப்போய்விட்டது. அவர் நடிக்க சம்மதித்தார். நாங்கள் புதிய இயக்குனர்கள் என்றாலும், பெரிய பட்ஜெட் படம் இது. தயாரிப்பாளர் ஹபீப் ஹனீப் கைகொடுத்தார். அதன் மூலம் இந்த சினிமா முழுமை பெற்றிருக்கிறது” என்கிறார், சுதீப்.

“நாங்கள் பார்க்க விரும்புவது மாதிரியான சினிமாவை டைரக்ட் செய்யவேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது. நல்ல பாட்டுகள், நடனம், தமாஷ் எல்லாம் கலந்த கலவையாக இந்த சினிமா இருக்கும். குடும்ப பந்தத்தின் சிறப்பை உணர்த்தும் திருவிழாபோன்று இந்த சினிமாவை உருவாக்கியுள்ளோம். பஞ்சாபி சினிமாவின் முழு அழகையும் இதற்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். வேம்பநாட்டு காயலின் அழகை இன்னொரு கோணத்தில் இதில் ரசிக்கலாம். பஞ்சாப், கோவாவிலும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். நாங்கள் குடும்பமாக இணைந்து குடும்பத்தினர் பார்க்கும் சினிமாவை தரப்போகிறோம்” என்கிறார், கீதிகா.

சுதீப்பும், கீதிகாவும் ஒரே ஊடகத்தில் பணியாற்றியவர்கள். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. பின்பு இருவரும் பணியில் இருந்து விலகி, கூடுதலாக படிக்க சென்றார்கள். அடுத்து குறும்படங்கள், விளம்பர படங்களை இயக்கினார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள். நல்ல கதை கிடைத்தால் டைரக்ட் செய்யலாம் என்று தீர்மானித்திருந்த அவர்கள், ஹேப்பி சர்தார் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டார்கள்.

Next Story