கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்


கதாநாயகனாக அறிமுகப்படுத்திய கலைஞானத்துக்கு வீடு கொடுத்த ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:30 PM GMT (Updated: 8 Oct 2019 8:14 PM GMT)

கலைஞானத்துக்கு சென்னை விருகம்பாக்கத்தில் 3 படுக்கைகளுடன் கூடிய வீட்டை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்துள்ளார்.

இயக்குனர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். ரஜினியை முதன்முதலில் ‘பைரவி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கலைஞானம். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு ரஜினிக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

கலைஞானம் 1980 மற்றும் 90–களில் மேலும் பல படங்களை தயாரித்தார். கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில் சினிமாவில் லாபம் சம்பாதித்த கலைஞானத்துக்கு, பிறகு தயாரித்த படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்தன. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கலைஞானத்துக்கு இயக்குனர் பாரதிராஜா விழா எடுத்தார். 

இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிவகுமார் பேசும்போது, ‘‘கலைஞானத்துக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார். அவருக்கு அரசு வீடு கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அமைச்சர் கடம்பூர் ராஜுவும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய ரஜினிகாந்த் அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். நானே கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுப்பேன் என்று அறிவித்தார். சொன்னபடியே கலைஞானத்துக்கு சென்னை விருகம்பாக்கத்தில் 1,320 சதுர அடியில் 3 படுக்கைகளுடன் கூடிய வீட்டை வாங்கி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

அந்த வீட்டுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் வீட்டை சுற்றிப் பார்த்து தெய்வீகமாக உள்ளது என்று கூறினார். ரஜினிக்கு கலைஞானமும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர். சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

Next Story