சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த் தன்னை கதாநாயகனாக அறிமுகம் செய்த பட அதிபர் கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்து இருக்கிறாரே...அவரை பின்பற்றி தங்களை கதாநாயகனாக அறிமுகம் செய்த பட அதிபர்களுக்கு மற்ற கதாநாயகர்களும் வீடு வாங்கி கொடுப்பார்களா? (ஜே.அரவிந்த், சென்னை–87)

வீடு வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நன்றியுடன் நடந்து கொண்டால், அதுவே போதும் என்கிறார்கள், தயாரிப்பாளர்கள்!

***

டைரக்டர் பா.ரஞ்சித் மற்ற இயக்குனர்களை வைத்து சொந்த படம் தயாரிப்பது ஏன்? (பி.ரவீந்திரன், சேலம்)

டைரக்டராகும் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத உதவி டைரக்டர்களுக்காகவே பா.ரஞ்சித் சொந்த படம் தயாரிக்கிறாராம்!

***

குருவியாரே, ஆனந்தி ஏறக்குறைய சிரிப்பழகி சினேகாவைப் போலவே இருக்கிறாரே...இருவருக்கும் ஒட்டு–உறவு ஏதாவது இருக்கிறதா? (எஸ்.கோதண்டராமன், ஏலகிரி)

‘நடிகைகள்’ என்ற ஒன்றை தவிர, சினேகாவுக்கும், ஆனந்திக்கும் வேறு எந்த ஒட்டும் இல்லை. உறவும் இல்லை!

***

கோவை சரளா சென்னையில் எந்த பகுதியில் வசிக்கிறார்? அவர் வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா? (எம்.ராம், சென்னை–4)

கோவை சரளா சென்னையில் விருகம்பாக்கத்தில் வசிக்கிறார். அது அவருடைய சொந்த வீடுதான். வாடகை வீடு அல்ல!

***

குருவியாரே, குத்து சண்டை வீராங்கனை வேடத்தில் நடிக்க ரித்காசிங்கை விட்டால் வேறு நடிகைகளே இல்லையா? (கே.பரத், ராமநாதபுரம்)

ஏன் இல்லை? நயன்தாரா, திரிஷா போன்ற முதன்மை கதாநாயகிகள் கூட, குத்து சண்டை காட்சிகளில் நன்றாகவே நடிப்பார்களாம்!

***

சிவகார்த்திகேயன் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறார்? (ஆர்.கல்யாண், திருச்சி)

‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்துக்குப்பின், குடும்ப உறவுகளை கருவாக கொண்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க விரும்புகிறாராம்!

***

குருவியாரே, வருகிற தீபாவளிக்கு எத்தனை படங்கள் திரைக்கு வருகின்றன? (எஸ்.காயத்ரி, கரூர்)

விஜய் நடித்த ‘பிகில்,’ கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய 2 படங்களும் தீபாவளி வெளியீடுகளாக உறுதி செய்யப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி நடித்த ‘சங்க தமிழன்’ படமும் தீபாவளிக்கு வர தயாராக இருக்கிறது. அந்த படத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது பேசி தீர்க்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

***

வடிவேல், சந்தானம் ஆகிய 2 பேர் நகைச்சுவை நடிப்பிலும் யாருடைய சாயல் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? (கே.ஆர்.வசந்த், பொள்ளாச்சி)

வடிவேலுவிடம் நாகேஷ் சாயலும், சந்தானத்திடம் கவுண்டமணி சாயலும் தெரியும்!

***

குருவியாரே, ரேவதி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (கே.பட்டாபிராமன், திருவள்ளூர்)

‘அழகு’ என்ற ‘சின்னத்திரை’ தொடரில், அம்மா வேடத்தில் ரேவதி நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

சென்னையை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு போய்விட்ட கதாநாயகிகள் யார்–யார்? (ஏ.லிஸ்பன், ஜோலார்பேட்டை)

விஜயசாந்தி, ரோஜா ஆகிய இருவருக்கும் பூர்வீகம், ஆந்திர மாநிலம். இவர்கள் இரண்டு பேருமே சென்னையை காலி செய்துவிட்டு சொந்த மாநிலத்தில் குடியேறி விட்டார்கள்!

***

குருவியாரே, தேவயானி–ராஜகுமாரன் தம்பதிகளை சென்னையில் சந்திக்க முடிவதில்லையாமே...இருவரையும் எங்கே சந்திப்பது? (எஸ்.அஸ்வின், உடுமலைப்பேட்டை)

தேவயானி–ராஜகுமாரன் இருவரையும் சென்னையில் உள்ள வீட்டில் பார்ப்பது அபூர்வம். இரண்டு பேரும் மகள்களுடன் அடிக்கடி ஈரோடு அருகில் உள்ள அந்தியூர் பண்ணை வீட்டுக்கு போய் விடுவதாக கேள்வி. அங்கே ரசிகர்களை சந்திக்கிறார்களாம்!

***

அடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கும் நட்சத்திர காதல் ஜோடி யார்? (பே.தமிழரசன், மதுரை)

ஜெய்–அஞ்சலி ஜோடியின் காதல் திருமணத்தை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் இப்போது அதிக படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் யார் என்று கூற முடியுமா? (என்.அன்புக்கரசு, கோவில்பட்டி)

இளையராஜா! இப்போதும், எப்போதும் அவர் கைவசமே அதிக படங்கள் உள்ளன!

***

‘கன்னக்குழியழகி’ சிருஷ்டி டாங்கேயை காணவில்லையே...அவர் இப்போது நடிக்கிறாரா, இல்லையா? (பி.வாசுதேவன், அம்பாசமுத்திரம்)

சிருஷ்டி டாங்கே இப்போது, ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணேஷ் பாபு இயக்கும் இந்த படத்தில், சிருஷ்டி டாங்கே 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, கே.ஆர்.விஜயாவுக்கு ‘புன்னகை அரசி’ என்று பட்டம் கொடுத்து கவுரவித்த ரசிகர்கள், சரோஜாதேவிக்கு பட்டம் கொடுத்து கவுரவித்து இருக்கிறார்களா? (ஏ.கே.செல்வராஜ், கோவை)

கே.ஆர்.விஜயாவை விட மூத்த நடிகை சரோஜாதேவி. அவருக்கு ரசிகர்கள், ‘கன்னடத்து பைங்கிளி’ என்றும், ‘அபிநய சரஸ்வதி’ என்றும் பட்டம் கொடுத்து கவுரவித்து இருக்கிறார்கள்!

***

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகிய மூன்று பேரில், பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் முகவசீகரம் கொண்டவர் யார்? (கோ.ராதா பாண்டியன், திருவிடை மருதூர்)

‘‘நயன்தாராதான் சிறந்த முகவசீகரம் கொண்டவர்’’ என்பதை திரிஷாவும், அனுஷ்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்!

***

குருவியாரே, பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்படுமா? (இரா.ஆனந்த், அருப்புக்கோட்டை)

அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. டைரக்டர்–நடிகர் பார்த்திபனுக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்!

***

‘வைகை புயல்’ வடிவேல் நடித்ததில், ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆதரவை பெற்ற ரசனைக்குரிய கதாபாத்திரம் எது? (மு.ஜாபர் அலி, ஈரோடு)

‘கைப்புள்ள!’ சித்தப்பா நேசமணி, வண்டு முருகன், ஸ்னேக் பாபு, நாய் சேகர் ஆகிய கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவைதான்!

***

குருவியாரே, ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றவில்லையே, ஏன்? (சி.கேத்தரின், தூத்துக்குடி)

‘‘நடித்தால், கதாநாயகனாகவே நடிப்பேன்’’ என்று உறுதியாக இருக்கிறார், ராமராஜன். அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை!

***

சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதுகளை வென்ற நடிகைகள் யார்–யார்? (எஸ்.ஞானவேல், ராசிபுரம்)

‘ஊர்வசி’ சாரதா, அர்ச்சனா, சுஹாசினி!

***

ஆசிரியரின் தேர்வுகள்...