விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை


விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை
x
தினத்தந்தி 13 Oct 2019 5:36 AM GMT (Updated: 13 Oct 2019 5:36 AM GMT)

விஜய் நடிக்கும் 64-வது சினிமாவிற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதில் கதாநாயகியாக நடிப்பவர் மாளவிகா மோகனன்.

விஜய் நடிக்கும் 64-வது சினிமாவிற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதில் கதாநாயகியாக நடிப்பவர் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் ஏற்கனவே நடித்தவர். மாளவிகா மோகனனின் தாயார் பத்திரிகையாளர் பீனா மோகனன். தந்தை கே.யூ.மோகனன் பிரபலமான பாலிவுட் சினிமா ஒளிப்பதிவாளர்.

ஷாருக்கான், அமீர்கான், வித்யாபாலன் போன்ற பிரபலங்களை தான் பணிபுரியும் மலையாள பத்திரிகைக்காக பேட்டி எடுத்துள்ள, பீனா மோகனன் தனது மகளிடமும் கேள்விகள் கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன் ருசிகரமாக பதில் அளித்தார். அதன் விவரம்:

‘வெப் சீரிஸ்’ ஒன்றில் விருந்தினர் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாய். இப்போது பிரபலமாகிவிட்டதால் இந்த வீட்டிற்கும் விருந்தினர் போலத்தான் எப்போதாவது வருகிறாய் அப்படித்தானே?

ஆம்.. நான் இப்போது விருந்தினர் போலத்தான்..! (சிரிக்கிறார்). வியட்நாமில் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். சான்பிரான்சிஸ்கோவுக்கு தொழில்ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். டிசைனர் ஒருவரது ஷூட்டிங்குக்காக லடாக் சென்றேன். இப்படி சுற்றிக்கொண்டே இருப்பதால் சொந்த வீட்டிற்கே விருந்தாளிபோல் ஆகிவிட்டேன்.

தனியாக சுற்றுப்பயணம் செய்ய பயம் இல்லையா? அது போரடிக்கவும் செய்யாதா?

இந்தியாவிலேயே நீங்கள் என்னை தனியாக சுற்றுப்பயணம் செய்ய அனுமதித்ததில்லை. வெளிநாட்டில் ஆண்- பெண் பாலின வித்தியாசத்தை நான் எங்கேயும் உணர்ந்ததில்லை. தனியாக நாம் சுற்றுப் பயணம் மேற்கொள்வது நமது ஆளுமைத்திறனை வளர்க்க உதவும் என்பது எனது அனுபவம். வெளி நாடுகளுக்கு தனியாக செல்லும்போது, அந்த நாட்டைப் பற்றிய முழு விவரங்களையும் நாம் படித்து அறிந்துகொள்கிறோம். பெற்றோராகிய நீங்கள் இருவரும் தரும் அனுமதியால்தான் என்னால் உலகம் சுற்ற முடிகிறது.

‘பேட்ட’யில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அது வித்தியாசமான அனுபவம். நான் சூப்பர் ஸ்டாரிடம் எனது சகோதரனை கொல்வதற்கு சொல்லும் காட்சியில் உணர்ச்சிபூர்வமான நீண்ட தமிழ் வசனம் பேசவேண்டியிருந்தது. ஒரே டேக்கில் நான் அதை பேசிமுடித்துவிட்டேன். பேசி முடித்ததும் ரஜினி சார் கரவொலி எழுப்பி பாராட்டினார். உடனே அங்கே இருந்த அனைவரும் கைதட்டினார்கள். ரஜினி நான் தமிழ்பெண் என்று நினைத்திருந்தார். அன்றே அவர் நான் நடித்த ‘பியான்டு த கிளவுட்’ சினிமாவை பார்த்தார். அதில் நன்றாக நடித்திருந்ததாக மறுநாள் என்னை பாராட்டினார்.

அவர் மிக பிரபலமான நடிகராக இருந்தபோதும் அமைதியாக வந்து நடித்துவிட்டு அமைதியாக செல்வார். எங்கேயும் அவரால் எந்த பரபரப்பும் இருக்காது. பேட்டயில் நடிக்கும்போது முதல் நாளே அவர் என் அருகில் வந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார். நான் படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரங்களில் பரமஹம்ச யோகானந்தாவின் ‘ஆட்டோபயாகிராபி ஆப் ஏ யோகி’ என்ற புத்தகத்தை படித்துக்கொண்டிருப்பேன். அதை பார்த்துவிட்டு அவர் எனக்கு கிரியாயோகாவின் அற்புதங்களை எல்லாம் மிக சிறப்பாக விளக்கினார். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

இந்தியில் வரும் வாய்ப்புகளை தவிர்ப்பது போல் தெரிகிறதே?

எனது தலைமுறை நடிகைகள் முந்தைய தலைமுறை நடிகைகளை போன்று இந்தி சினிமா வாய்ப்புகளை தேடி அலைவதில்லை. தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் கதை நன்றாக இருக்கவேண்டும். ஆலியாபட்டும், ஷிரத்தா கபூரும் இந்தியில் பிரபலமாக இருந்தபோதிலும் தெலுங்கிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிலிம் பேர் விருது விழாவில் ஷாருக்கானுடன் நடனமாடிய அனுபவம் எப்படி இருந்தது?

அந்த விழா தொடங்கியதும் ஷாருக்கான் மேடைக்கு வந்து, விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட எங்கள் ஐந்து பேரையும் மேடைக்கு அழைத்து, ஒரு நடனத்தின் மூலம் எங்களை அறிமுகம் செய்தார். அப்பா ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தபோது படப்பிடிப்பில் பலமுறை ஷாருக்கானை சந்தித்திருந்தாலும், அன்று அவரோடு நடனமாடியது திரில்லான அனுபவம்.

உனது தந்தை திரை உலகில் இருப்பது உன் வளர்ச்சிக்கு பலனுள்ளதாக இருக்கிறதா?

ஆமாம். அவரால் எனக்கு எல்லா இடங்களிலும் மரியாதை கிடைக்கிறது. பின்னணி தெரிந்ததால் யாரும் தேவையில்லாமல் ஆலோசனை சொல்வதில்லை என்பது பிளஸ் பாயிண்ட்.

உனது சுற்றுப்பயணங்களில் மறக்க முடியாதது எது?

நானும், என் நண்பர்களும் கடந்த முறை கபினி மசனகுடி காட்டுப் பகுதியில் பயணம் செய்தோம். சிறுத்தை புலியின் கால்தடத்தை பார்த்தோம். அப்போது எங்களுடன் வந்த வன அதிகாரி, புலி இப்போது தான் இந்த பகுதிக்கு வந்திருக்கிறது. உடனே காரில் ஏறுங்கள் என்றார். ஏறியதும் எங்களுடன் இருந்த ஒருவர் பயங்கரமாக அலறினார். அப்போதுதான் பார்த்தேன். காரின் முன்பகுதியில் பதுங்கியபடி இருந்தது ஒரு சிறுத்தை..! நானும் மிரண்டுபோனேன்.

பல மொழிகளில் நடித்திருக்கிறாய். ஏதாவது மோசமான அனுபவம் உண்டா?

நல்ல அனுபவங்களைவிட மோசமான அனுபவங்களை கேட்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். எனக்கு மோசமான அனுபவங்கள் எதுவும் இல்லை. எல்லாம் நல்ல அனுபவங்களாகத்தான் இருக்கின்றன.

உனது வாழ்க்கையில் (பெற்றோராகிய) எங்களது தாக்கங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நீங்கள் தந்த சுதந்திரமும், நீங்கள் என் மீது வைத் திருக்கும் நம்பிக்கையும் விலைமதிப்பற்றது. நானும், சகோதரன் ஆதித்யாவும் வளரும் பருவத்தில் புத்தகங்களோடும் சினிமாவோடும் வளர்ந்தோம். குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுக்கும்படியோ, பாதுகாப்பான வேலையை தேடிக்கொள்ளும்படியோ எங்களை நீங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதுவே எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

‘விஜய் 64’ படத்தில் நடிக்கும் அனுபவத்தை சொல்..?

கனவில்கூட நான் நினைத்து பார்க்கவில்லை. இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை தருகிறது. உற்சாகத்தோடு நடித்துக்கொண்டிருக்கிறேன்!

அம்மாவின் கேள்வியும், மகளின் பதிலும் ரசிக்கக்கூடியதுதான்!

Next Story