சினிமா செய்திகள்

40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர் + "||" + Even after 40 years Producer who returned the salary package to actress Urvashi Sarada

40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்

40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்
40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்து, ஒரு பட தயாரிப்பாளர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
பழம்பெரும் நடிகை ஊர்வசி சாரதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்தவர். தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதை 3 முறை வென்ற ஒரே நடிகை இவர்தான்.

இதன்காரணமாக சாரதா என்ற அவரது பெயருக்கு முன்னால் ஊர்வசி என்ற பட்டமும் இணைந்து விட்டது.

பிரபலமாக விளங்கிய இவரை வைத்து 1979-ம் ஆண்டு, புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை கேரள மாநிலம், ஆலுவாவை சேர்ந்த தயாரிப்பாளர் வி.வி. ஆண்டனி எடுத்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அவர், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்க முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கினார். தொடர்ந்து வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள், வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை. இதனால் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை அவர் தர முடியாமலேயே போய்விட்டது.

காலங்கள் உருண்டோடின. 40 ஆண்டுகள் கடந்து விட்டன.

தனக்கு பட தயாரிப்பாளர் ஆண்டனி சம்பள பாக்கி தர வேண்டியதை நடிகை ஊர்வசி சாரதா மறந்தே போய்விட்டார். ஆனால் ஆண்டனி மறக்கவில்லை.

இதற்கு இடையே பிள்ளைகளால் ஆண்டனியின் பொருளாதார நிலை உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிகை ஊர்வசி சாரதா வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்து சம்பள பாக்கியை கொடுத்து விட விரும்பினார்.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக ஆண்டனிக்கு தெரிய வந்தது.

அவருக்கு தர வேண்டிய பணத்தை விட கூடுதலான ஒரு தொகையை கவரில் போட்டு எடுத்துக்கொண்டு கொச்சி விழாவுக்கு ஆண்டனி சென்றார்.

விழாவுக்கு இடையே அவர் நடிகை ஊர்வசி சாரதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் தான் எடுத்து வந்திருந்த பண கவரை அவரிடம் தந்தார். 40 ஆண்டுகள் ஆன போதும், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி தந்ததில், அவர் காட்டிய நேர்மை, நடிகை ஊர்வசி சாரதாவுக்கு வியப்பை தந்தது. அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றனர்.

சம்பள பாக்கிக்காக படங்களை முடக்கி வைக்கிற சூழ்நிலை நிலவுகிற இந்தக் காலத்தில், நடிகை ஊர்வசி சாரதாவுக்கு 40 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருந்த சம்பள பாக்கியை தயாரிப்பாளர் ஆண்டனி கொடுத்து தீர்த்தது திரையுலகினர் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...