பிகில், கைதி படங்கள் நாளை ரிலீஸ் - சிறப்பு காட்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை


பிகில், கைதி படங்கள் நாளை ரிலீஸ் - சிறப்பு காட்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2019 12:16 AM GMT (Updated: 24 Oct 2019 12:16 AM GMT)

பிகில், கைதி படங்கள் நாளை ரிலீஸாக உள்ளநிலையில், சிறப்பு காட்சிக்கு தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தீபாவளி பண்டிகையையொட்டி நாளை திரைக்கு வரும் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. பிகில் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறும்போது, “உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிகில் திரைக்கு வருகிறது. படத்தில் அரசியல் இல்லை. கால்பந்து, பெண்கள் முன்னேற்றம், சமூக அக்கறை சார்ந்த விஷயங்களே இருக்கும். ரூ.180 கோடி செலவில் தயாராகி உள்ளது. படப்பிடிப்பு 198 நாட்கள் நடந்துள்ளது. இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் 7 ஸ்பைடர் கேமராக்கள் கொண்டு கால்பந்து போட்டிகள் படமாக்கப்பட்டு உள்ளன” என்றார்.

அனைத்து தியேட்டர்களிலும் பிகில், கைதி டிக்கெட் முன்பதிவுகள் முடிந்துள்ளன. ரசிகர்களுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடவும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் சிறப்பு காட்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கூறும்போது, “தீபாவளிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடும் வழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது. எனவே பிகில், கைதி படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரையும், செய்தி துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, பிகில், கைதி படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையுலகினரை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story