காட்டுத் தீயில் இருந்து நடிகர் அர்னால்டு உயிர் தப்பினார்


காட்டுத் தீயில் இருந்து நடிகர் அர்னால்டு உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:37 PM GMT)

காட்டுத் தீயில் இருந்து நடிகர் அர்னால்டை 2 தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி அழைத்து வந்தனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென்று காட்டுத்தீ பரவி உள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளை தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத்தீயால் பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸ் சொகுசு வீடு எரிந்து நாசமானது. இந்த தகவலை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது. இதனால் தப்பி செல்ல வழி தெரியாமல் தவித்தார்.

2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று அர்னால்டை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்று டுவிட்டரில் அர்னால்டு பாராட்டி உள்ளார். இதுபோல் காட்டுத் தீயில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்கள் கிளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.

அவர்கள் வீடுகள் தீக்கு இரையானதால் தங்க இடம் இன்றி தவிப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர். அர்னால்டு, லிண்டா ஹாமில்டன் ஆகியோர் நடித்துள்ள டெர்மினேட்டர் டார்க் பேட் படம் திரைக்கு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக இந்த படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது.

Next Story