திரைக்கு வரும் தனுசின் 2 படங்கள்


திரைக்கு வரும் தனுசின் 2 படங்கள்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:45 PM GMT (Updated: 31 Oct 2019 8:26 PM GMT)

நடிகர் தனுஷ் நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து திரைக்கு வந்துள்ள அசுரன் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்ததுடன் நல்ல வசூலும் பார்த்தது. இந்த படம் மூலம் மலையாள நடிகை மஞ்சுவாரியர் தமிழ் பட உலகில் அறிமுகமாகி உள்ளார். படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அசுரன் படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேசும், இந்தியில் ஷாருக்கானும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இன்னும் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது.

இதில் சினேகா, மெஹரின், முனிஷ் காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். துரை செந்தில்குமார் இயக்குகிறார். சோழர்களின் வீர விளையாட்டான களரியை மையமாக வைத்து தயாராகிறது. தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது.

இந்த 2 படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு முடிந்து பண பிரச்சினைகளால் திரைக்கு வராமல் நீண்ட நாட்களாக முடங்கி உள்ளது.

Next Story