கருணாநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவிஞர்


கருணாநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவிஞர்
x
தினத்தந்தி 1 Nov 2019 11:13 AM GMT (Updated: 1 Nov 2019 11:13 AM GMT)

அப்பாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர், வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர். இந்த வி.பி.ராமனின் தந்தையும் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர்தான். லாயிட்ஸ் ரோடில் அடுத்தடுத்து நான்கு பங்களாக்கள் அவருக்கு இருந்தது. இதில் ஒன்றில்தான், சினிமாவில் நடிக்க வந்த புதிதில், எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் சக்கரபாணியும் வாடகைக்கு குடியிருந்தார்கள்.

சொந்தவீடு வாங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் கனவு. தாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை. ஆனால் அதற்கு வாடகை தரவே வருமானம் போதாத நிலையில் எப்படி வாங்குவது.

ஒரு நாள் வி.பி.ராமனின் தந்தை எம்.ஜி.ஆரை அழைத்து “வீட்டை விக்கப் போறேன். வேற ஒருத்தருக்கு தர மனசில்லை. நீயே வாங்கிக்கோ” என்றார்.

எம்.ஜி.ஆர். “வாங்கணும்னு ஆசை, ஆனால் இப்போ இருக்க சூழல்ல வாங்க முடியாது.”

“ஏன் முடியாது, இதுவரைக்கும் நீ தந்த வாடகையை அட்வான்ஸா வச்சுக்கிறேன். பாக்கியை கொஞ்சம் கொஞ்சமா தா” என்றார்.

(அப்படி எம்.ஜி.ஆர். வாங்கிய வீடுதான் இன்றைக்கு அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாக இருக்கிறது. இதை எம்.ஜி.ஆர். தனது ‘நான் ஏன் பிறந்தேன்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக் கிறார். அதை வெளியிட்டது எங்களது கண்ணதாசன் பதிப்பகம்).

அப்பாவுக்கு வி.பி.ராமன் தான் வக்கீல். ஆனால் வக்கீல்-கட்சிக்காரர் என்பதைத் தாண்டி அவருக்கும் அப்பாவுக்கும் நல்ல நட்பு இருந்தது.

படம் எடுத்த வகையில் அப்பா பெரிய கடனாளி ஆனார். உறவுகள் ஒதுங்கிக்கொள்ள, கை கொடுத்தவர் வி.பி.ராமன் மட்டுமே.

இதை அப்பாவே எழுதி இருக்கிறார். “இவ்வளவு பெரிய தொகையை உன்னால் சம்பாதித்து கட்ட முடியாது. பேசாமல் திவால் நோட்டீஸ் கொடுத்துவிடு. பின்னால் கடன் கொடுத்தவர்களிடம் மத்தியஸ்தம் செய்து கொள்வோம்” என்றார் அவர்.

“வேண்டாம், நான் கையெழுத்துப் போடவில்லை என்றாலும் கடன் தந்தவர்கள் என்னை நம்பித் தந்தார்களே தவிர என் பார்ட்னரை நம்பி தரவில்லை. இன்சால்வென்ஸி தருவது ஏமாற்று வதற்கு சமம்” என்று அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

வனவாசத்தில் அப்பா எழுதுகிறார் (வனவாசத்தில் தன்னை ‘அவன்’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்)

“மூன்று மாதங்களுக்குள்ளாக முப்பத்தி நான்கு வழக்குகள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. நேரே வழக்கறிஞர் வி.பி.ராமனிடம் சென்றான் அவன். அவரை அவன் தன் வாழ்நாளில் மறக்க முடியாது. அவர் அவனுக்கு பெரும் உதவி செய்தார். “ஒரு வருஷத்துக்குள் சம்பாதித்துக் கட்ட முடியுமா?” என்றார் அவர். “முடியும்” என்றான் அவன்.

ஒரு பக்கம் கடன் வந்தால் ஒரு பக்கம் வரவு வர வேண்டும் அல்லவா? அந்தப் பக்கம் அடி விழுந்த போது இந்தப் பக்கம் அவனுக்கும் ஏராளமான படங்களுக்கு எழுத சந்தர்ப்பம் வந்தது. நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கிற்று.

வி.பி.ராமன் வழக்குகளுக்கென்று அவனிடம் பணம் வாங்கி இருந்தால் பல்லாயிரம் ரூபாய்கள் அவனிடம் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் கடைசி வரையில் அவர் காலணாக் கூட வாங்கவில்லை.”

அவ்வப்போது மாலை நேரங்களில் அப்பா, வி.பி.ராமனின் இல்லத்திற்கு சென்று பேசிக் கொண்டிருப்பார். அவரும் அவரது மனைவியும் படித்தவர்கள் என்பதால் ஆங்கில இலக்கியங்களில் இருந்து பல கவிதைகளை அப்பாவுக்கு மொழி பெயர்த்து சொல்வதுண்டு. அப்படி ஒரு முறை திருமதி.ராமன், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் இருந்து சொன்ன சில வரிகள் தான் அப்பாவின் “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே” என்ற பாடல் ஆகியது.

முப்பத்தி நான்கு வழக்குகளுடன் இன்னும் பல வழக்குகள் சேர்ந்து கொண்டன. பாடல் கம்போசிங், அரசியல் கூட்டங்கள், பத்திரிகை என்று அப்பா அலைந்து கொண்டிருந்ததால் அவரால் வி.பி.ராமன் அழைக்கும் நேரங்களில் போக முடியவில்லை. இதனால் வி.பி.ராமன் ஒரு காரியம் செய்தார். அப்பாவிடம் பல வக்காலத்து பேப்பர்களில் முன்கூட்டியே கையெழுத்து வாங்கி வைத்து இருந்தார். புது வழக்குக்கான நோட்டீஸ் வந்தால் அவரே அந்த வக்காலத்தை பூர்த்தி செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விடுவார். அப்பாவை எதிர்பார்த்தது இல்லை.

ஒருமுறை அப்பாவும் வி.பி.ராமனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்பா அவரிடம் “இப்பவெல்லாம் பாட்டெழுதி பல நாட்கள் கழித்துதான் பணம் தராங்க. அதனால சொன்ன நேரத்தில கோர்ட்ல கட்ட முடியாம போயிடுது. இப்ப கூட கருணாநிதியோட கம்பெனிக்கு பாட்டெழுதி இருபது நாள் ஆயிடுச்சு. இன்னும் பணம் வரலை” என்று பேச்சுவாக்கில் சொல்லி இருக்கிறார்.

“பாவம் கண்ணதாசன் இவருக்கு கருணாநிதியே பணம் தரலைனா எப்படி என்று வருத்தப்பட்டு, அப்பா கையெழுத்து போட்டுத் தந்திருந்த வெற்று வக்காலத்தை பூர்த்தி செய்து “எனது கட்சிக்காரர் கண்ணதாசனுக்கு நீங்கள் தரவேண்டிய பணத்தை தரவில்லை” என்று கருணா நிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.

தனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது கருணாநிதிக்கு முதல் அதிர்ச்சி. அதிலும் அனுப்பியது கண்ணதாசன் என்று தெரிந்தது இரண்டாவது அதிர்ச்சி. பணத்திற்காக கண்ணதாசன் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என்பது மூன்றாவது அதிர்ச்சி.

வேடிக்கை என்னவென்றால் வி.பி.ராமன், கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது அப்பாவுக்கு தெரியாது. கண்ணதாசன் பணம் தரவேண்டும் என்று கேட்டு அவருக்குத் தான் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கிறதே தவிர அவர் பணம் கேட்டு தன் வாழ்நாளில் யாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது இல்லை.

தன் நண்பன் பணம் கேட்டு அனுப்பிய வக்கீல் நோட்டீஸை பார்த்தவுடன் கருணாநிதி கலங்கி விட்டார்.

அப்பாவிடம் நேரடியாக பேசத்தயங்கி பஞ்சு அருணாசலத்திற்கு போன் செய்து “பஞ்சு! கொஞ்சம் என் ஆபீசுக்கு வா” என்று வரச் செய்தார்.

பஞ்சு அங்கு போனவுடன் அவரிடம் வி.பி.ராமன் அனுப்பிய நோட்டீஸைக் காட்டி “நான் பணம் தரமாட்டேன்னு இதை அனுப்பி இருக்காரா?, என்னாச்சு உன் சித்தப்பாவுக்கு?” என்று வருத்தப்பட்டு சொல்லி இருக்கிறார்.

பஞ்சு அண்ணன் “கவிஞர் என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லிடுவார். இதை ஏன் சொல்லலைனு தெரியல. நான் கவிஞர்கிட்ட கேட்கிறேன்” என்று சமாதானம் சொல்லி விட்டு வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த பஞ்சு அண்ணன் அப்பாவிடம் , தன்னை கருணாநிதி அழைத்ததை சொல்லி நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். கருணாநிதிக்கு ஏற்பட்டதை விட அப்பாவுக்கு அதிக அதிர்ச்சி.

“உன்னை வரச் சொன்னதுக்கு பதிலா கருணாநிதி நேரடியா எனக்கே போன் செஞ்சு கேட்டிருக்கலாமே?” என்று கேட்டுவிட்டு அவரே கருணாநிதிக்கு போன் செய்து பேசினார்.

“யோவ் நெஜாமவே எனக்கு ஒண்ணும் தெரியாதய்யா. வி.பி.ராமன் கிட்ட கோர்ட்ல கட்ட பணம் இல்லை. யார் யார் பணம் தரணும்னு சொல்லிகிட்டு இருந்தேன். அவரே என்மேல பாவப்பட்டு உனக்கு நோட்டீஸ் அனுப்பிட்டாரு. உங்கிட்ட பணம் கேட்டு நான் நோட்டீஸ் அனுப்புவன்னு நீ எப்படி நினைச்ச?” என்று சொல்ல..

“சரி, இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு மெரினா பீச்ல லைட் ஹவுஸ் கிட்ட வாய்யா” என்று அவர் அழைக்க. எட்டு மணிக்கு அப்பா அங்கு போய் அவருடன் பேசி பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொண்டார்கள்.

(‘ஆனந்த ராகம்’ படப்பிடிப்பின் போது ஒரு இடைவேளையில் இதை எனக்கு சொன்னவர் பஞ்சு அருணாசலம்)

வி.பி.ராமனுக்கும் அப்பாவுக்குமான தொடர்பு, இரண்டாம் தலைமுறையில் இன்றைக்கும் வி.பி.ராமனின் மகன் நடிகர், எழுத்தாளர் மோகன்ராமுடன் தொடர்கிறது.

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் தண்ணீர் சிகிச்சை

தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் முக்கியமானவர் டாக்டர் ரங்கபாஷ்யம். அப்பாவின் மிக நெருங்கிய நண்பர். அப்பா மட்டும் அல்ல எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி என்று பல பிரபலங்களுக்கு நண்பராகவும், மருத்துவராகவும் விளங்கியவர்.

கண்ணதாசனுக்கு சிலை வைத்த போதும், மணி மண்டபம் கட்டப்பட்ட போதும் தன்னை அழைக்காதது ஏன்? என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியவர்.

அப்பா பெத்தடின் போட்டுக்கொண்டிருந்த நேரம். ரங்கபாஷ்யத்தின் கிளினிக்கில் தான் போய் போட்டுக் கொள்வார். அந்தப் பழக்கத்தை விட்டுவிடச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் விட்டார் ரங்கபாஷ்யம்.

அதற்கு அவரே ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார். அப்பா தரும் பெத்தடின் மருந்தை போடாமல், டிஸ்ட்டில்வாட்டர் (சுத்திகரிக்கப்பட்ட மருத்துவ குணம் நிறைந்தது) போட்டு விடுவார். இரண்டுமே நிறமற்று இருந்ததால் அப்பாவுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

இப்படியே சில வாரங்கள் சென்றன. ஒருநாள் டாக்டர் ரங்கபாஷ்யம் அப்பாவிடம் “பாருங்க கவிஞர், ரெண்டு வாரமா நான் உங்களுக்கு டிஸ்ட்டில் வாட்டர்தான் போட்டுகிட்டு இருக்கேன். உங்களுக்கும் தெரியலை. இது எல்லாமே மனசை பொருத்த விஷயம். இனிமே இந்த பழக்கத்தை விட்டு விடுவீங்க இல்லையா?” என்று கேட்க, அப்பா “விட்டுடறேன், இனிமே உங்ககிட்ட ஊசி போட்டுக்கிறதை விட்டுடறேன்” என்று சொல்லிவிட்டு அங்கு போவதையே தவிர்த்துவிட்டார்.

பின்னர் ஒருமுறை அப்பாவின் உடல் நிலையை செக்கப் பண்ண வந்த டாக்டர் ரங்கபாஷ்யம், “கவிஞர், பெத்தடின் உங்க உடம்பை ரொம்ப கெடுத்திடுச்சு. நீங்க இன்னும் ஆறு மாசம் தான் உயிரோட இருப்பீங்க. உங்க பிள்ளைகளுக்கு ஏதாவது சேர்த்து வைக்கப் பாருங்க” என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.

கலங்கிப்போன அப்பா மறுநாளில் இருந்து அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். தெய்வாதீனமாக சில மாதங்களிலேயே அப்பா தானாகவே அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிட்டார்.

“எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமல் பெத்தடினை விட்டவர்கள் உலகத்திலேயே கிடையாது. உங்க அப்பாதான் எனக்கு தெரிந்த முதல் ஆள்” என்று டாக்டர் ரங்கபாஷ்யம் அடிக்கடி சொல்லுவார்.

பெத்தடினும் பெருந்தலைவரும்

ஒரு இலக்கிய கூட்டத்திற்காக அப்பா புதுச்சேரி சென்றார். அவர் சென்ற வாடகைக் கார், வழியில் விபத்துக்குள்ளானது. அப்பாவுக்கு தோள்பட்டை அருகில் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்பட்டது. முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளர் ராம.கண்ணப்பனுக்கு கழுத்து எலும்பு முறிவு. இருவரையும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து விட்டார்கள் .

அப்பாவை பரிசோதித்த டாக்டர்கள் “லிவரிலும் அடிபட்டு இருக்கிறது. எனவே நீங்கள் டிரீட்மென்ட் முடியும்வரை குடிக்கக் கூடாது” என்று சொல்லி விட்டார்கள். “குடிக்காவிட்டால் எனக்கு தூக்கம் வராது” என்று அப்பா சொல்ல. தூக்கத்திற்கு ஊசி போடுகிறோம் என்று டாக்டர்கள், அப்பாவுக்கு முதன் முறையாக பெத்தடின் ஊசி போட்டார்கள்.

அன்று ஆரம்பித்தது சனி. பெத்தடின் போதையை “ராஜ போதை” என்று சொல்வார் அப்பா. ஜிப்மரில் இருந்து வெளியே வந்தபோது பெத்தடினுக்கு அடிமையாகிப் போய் இருந்தார். ஒரு நாளைக்கு 15 ஊசிகள் போடும் அளவிற்கு அது முற்றிப் போயிற்று.

ஒருநாள் அம்மா எங்களிடம் “அப்பா யார் சொன்னாலும் கேட்க மாட்டார். ஆனா காமராஜர் சொன்னா நிச்சயம் கேட்பார். நீங்க போய் காமராஜரிடம் பேசுங்க..” என்று காந்தி, கமாலுடன் என்னையும் அனுப்பி வைத்தார். திருமலைப்பிள்ளை தெருவில் இருந்த காமராஜர் இல்லத்திற்கு போனோம்.

வெளியே செல்வதற்காக காமராஜர் வாசலுக்கு வந்தார். எங்களைப் பார்த்ததும் “என்ன?” என்று கேட்க, “அவங்க கண்ணதாசன் பிள்ளைங்க...” என்று அவருடைய உதவியாளர் வைரவன் சொன்னார்.

நாங்களும் காமராஜரிடம் விஷயத்தை சொன்னோம். “நான் சொன்னா மட்டும் அவன் கேட்கப் போறானா என்ன.. சரி.. சொல்லிப் பாக்கிறேன்.. நீங்க அதப்பத்தி யோசிக்காம நல்லா படிங்க.. போங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பிப்போய் விட்டார்.

நாங்கள் காமராஜரைப் பார்த்த விஷயம் தெரிந்து அப்பா கோபமாக எங்களைத் திட்டினார். அப்பா எங்களை திட்டியதே கிடையாது என்பதால் அது பெரிய விஷயமாக எங்களுக்கு இருந்தது.

-தொடரும்.

Next Story