இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக கூறி எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்


இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாக கூறி எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:03 PM GMT (Updated: 4 Nov 2019 11:03 PM GMT)

நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், ‘கேப்மாரி’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில், ஜெய் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

கதாநாயகிகளாக அதுல்யா, வைபவி ஆகிய 2 பேரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு போன்ற இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து, படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருப்பதாக கூறி, வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுதியான ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“இது, நான் இயக்கியிருக்கும் 70-வது படம். முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு விருந்தாக இருக்கும். படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், நெருக்கமான காதல் காட்சிகளும் இருப்பதாக கூறி, தணிக்கை குழுவினர், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இந்த காலத்து இளைஞர்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் ஏற்படும் விளைவுகளை படம் பேசுகிறது. அந்தக்காலத்தில் எம்.ஆர்.ராதா நடித்து, ‘ரத்த கண்ணீர்’ என்று ஒரு படம் வந்தது. கதையின் நாயகன் வாழ்க்கையில் கட்டுப்பாடு இல்லாததால், கொண்டாட்டங்கள் அதிகமாகவே இருக்கும். அதன் விளைவு என்னவாகிறது? என்று எல்லோருக்கும் தெரியும்.

அந்த கருத்தைத்தான் ‘கேப்மாரி’ படத்திலும் சொல்லியிருக்கிறேன். ‘செக்ஸ்’ இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால், ‘செக்ஸ்’தான் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. படத்தில் கருத்து சொன்னால், இளைஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த கருத்தையே காட்சிப்படுத்தி காட்டினால், வரவேற்கிறார்கள். இந்த படம் இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான படமாக இருக்கும். பட காட்சிகளில், உங்கள் வாழ்க்கை தெரியும். ஜெய் அனுபவித்து நடித்து இருக்கிறார்.”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

Next Story