ஓட்டு எண்ணிக்கை 5 மாதங்களாக முடக்கம்: நடிகர் சங்கத்துக்கு 9 பேர் குழு?


ஓட்டு எண்ணிக்கை 5 மாதங்களாக முடக்கம்: நடிகர் சங்கத்துக்கு 9 பேர் குழு?
x
தினத்தந்தி 10 Nov 2019 10:58 PM GMT (Updated: 10 Nov 2019 10:58 PM GMT)

ஓட்டு எண்ணிக்கை 5 மாதங்களாக முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு 9 பேர் கொண்ட குழு நியமிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. விஷால்-நாசர் அணியும் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் அணியும் மோதின. இந்த தேர்தலை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் ஓட்டு எண்ணிக்கையை நீதிபதி நிறுத்தி வைத்தார். கடந்த 5 மாதங்களாக ஓட்டுகள் எண்ணப்படாமல் உள்ளது.

இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதும் பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் செயல்பட வில்லை என்று பதிவாளருக்கு அளித்த புகாரின் பேரில் தற்போது சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்து உள்ளது.

இதற்கு நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை விவகாரம் மற்றும் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு ஆகிய 2 வழக்குகளும் வருகிற 14-ந்தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்க பணிகளை கவனிக்க 9 பேர் அடங்கிய தற்காலிக குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தனி அதிகாரி மற்றும் தற்காலிக குழு நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story