சினிமா செய்திகள்

மக்களை கவரும் ‘விளையாட்டு சினிமாக்கள்’ + "||" + Attracting people Movies game movies

மக்களை கவரும் ‘விளையாட்டு சினிமாக்கள்’

மக்களை கவரும் ‘விளையாட்டு சினிமாக்கள்’
டெலிவிஷன்களில் கபடி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளை நேரடியாக ஒளி பரப்பு செய்யும்போது, அவைகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டிருக்கிறது.
டெலிவிஷன்களில் கபடி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளை நேரடியாக ஒளி பரப்பு செய்யும்போது, அவைகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டிருக்கிறது. விளையாட்டு போட்டிகளை நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன் படுத்தி கண்களை கவரும் விதத்தில் ஒளிபரப்பு செய்வதால், போட்டிகளில் நிகழும் அதிரடி காட்சிகள் மக்கள் மனதில் தத்ரூபமாக பதிந்துவிடுகின்றன. அதனால் சாகசங்கள் நிறைந்த விளையாட்டு போட்டிகளை மக்கள் வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள். விளையாட்டு போட்டிகளை பார்க்கும் ஒவ்வொருவரும், அதன் மூலம் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள்.

விளையாட்டுக்களை ரசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பது சினிமா டைரக்டர்களை சிந்திக்கவைத்திருக்கிறது. காதல், மோதல், அடிதடி வன்முறை என்று திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளை படமாக்கிக் கொண்டிருந்த டைரக்டர்களில் பலர் விளையாட்டை மையமாக்கி படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழு வதும் பல்வேறு மொழிகளில் அவை தயாராகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாக்களில் கபடிக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. கால்பந்தை மையமாகக்கொண்ட சினிமாவின் அதிரடி காட்சிகளும் மக்களை அதிக அளவில் கவர்ந்துகொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் ‘பைனல்ஸ்’ என்ற மலையாள படமும் இடம்பெற்றி ருக்கிறது. அது சைக்கிள் வீராங்கனையை பற்றியது. யதார்த்தமாக அமைந்த இந்த படம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பினை பெற்றிருக்கிறது. அதில் கதாநாயகியாக நடித்தவர், ரஜீஷா விஜயன்.

அவர் தனது அனுபவங்களை சொல்கிறார்:

“பைனல்ஸ் சினிமாவில் ஒலிம்பிக் பதக்கம் வாங்க ஆசைப்படும் ஆலீஸ் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். நான் சிறுவயதிலே பெற்றோரிடம் சைக்கிள் வாங்கிக்கேட்டேன். ‘சைக்கிள் ஓட்டினால் கீழே விழுந்து அடிபட்டு விடும்’ என்று கூறி பெற்றோர் எனக்கு சைக்கிள் வாங்கித்தரவில்லை. நடிக்கும்போதுதான் சைக்கிள் வாங்கித்தந்தார்கள். ஆனால் சினிமா காட்சிக்காக சைக்கிள் சாகசம் செய்தபோது கீழேவிழுந்தேன். காலில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது.

பள்ளியில் படிக்கும்போதே எனக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஓட்டப்பந்தயத்தில் நான் சாம்பியனாக திகழ்ந்தேன். படத்தில் நான் சைக்கிள் வீராங்கனையாக நடித்தாலும், நடிப்பிற்காகத்தான் சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொண்டேன். மாநில அளவில் பிரபலமான அபிராமி என்ற வீராங்கனை எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத்தந்தார். என்னோடு புகழ்பெற்ற சைக்கிளிங் வீராங்கனைகள் 22 பேர் நடித்தனர். அவர்களில் சிலர் கல்லூரி மாணவிகள். சிலர் வேலைபார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள். விளையாட்டு வீராங்கனைகளின் உடல்மொழி எப்படி இருக்கும் என்பதை எல்லாம் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். பொதுவாகவே அவர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஹெல்மெட் மட்டுமே அணிந்துகொள்கிறார்கள். சைக்கிளில் கியர் இல்லை. ‘எல்போ கேப்’ போன்றவைகளையும் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவதில்லை.

மலைப் பகுதியில் சைக்கிள் ஓட்டுவது கஷ்டமான அனுபவமாக இருந்தது. செங்குத்தான இறக்கம் ஒன்றில் நான் வேகமாக சைக்கிளில் வந்தபோது குச்சி ஒன்று சைக்கிள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. நான் உடனே பிரேக் பிடித்ததால் பலத்தகாயம் அடைவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் கீழே விழுந்து காயமடைந்தேன். அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைகொடுத்தார்கள். இரண்டு வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடித்தேன். அடுத்தும் விபத்தில் சிக்கி தசைநார் கிழிந்துபோனது..” என்று தான் சிரமப்பட்டு நடித்த அனுபவங்களை ரஜீஷா பகிர்ந்துகொள்கிறார்.

இவர் உள்ளுணர்வு தனக்கு வழிகாட்டுவதாக சொல்கிறார். அதன்படியே தான் நடந்துகொள்வதாகவும் குறிப்பிடுகிறார்!

“பள்ளிப்படிப்பை முடித்த தும் எனக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் என் உள்ளுணர்வு, அது எனக்கான பாடம் இல்லை என்று சொன்னது. அப்போது என் உறவினர் ஒருவர் மாஸ்கம்யூனிகேஷன் பாடம் பற்றி சொன்னார். டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் அந்த துறை பற்றி படிக்க இடம்கிடைத்தது. அப்பாவும் டெல்லியிலே ராணுவத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்ததால் எனக்கு படிப்பதற்கு ரொம்ப சவுகரியமாக இருந்தது.

நான் படிப்பை முடித்த காலகட்டத்தில்தான் அங்கு நிர்பயா கூட்டு கற்பழிப்பு சம்பவம் நடந்தது. நான் வசித்த பகுதியின் அருகில்தான் அந்த கொடூரம் ஏற்பட்டது. அப்போது நான் டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் கொச்சிக்கு வந்தேன். அங்கு டெலிவிஷனில் தொகுப்பாளராக பணிபுரிந்தேன். அப்படியே நடிகையாகிவிட்டேன்.

இப்போது திருமணத்தை பற்றி கேட்கிறார்கள். எனது திரு மணம் பெரும்பாலும் அரேன்ஞ்டு மேரேஜ் ஆக இருக்காது. ஆனால் எளிமையாக நடக்கும். பல்வேறு நிபந்தனைகளோடு, ‘இப்படிப்பட்டவர்தான் எனக்கு மாப்பிள்ளையாகவேண்டும்’ என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாது. தனது நேரத்தையும், சக்தியையும் நல்லவிதத்தில் செலவிடும் ஒருவரே எனக்கு கணவராக வாய்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்கிறார், நடிகை ரஜீஷா விஜயன்.

ஆசிரியரின் தேர்வுகள்...