வலிமை, பொன்னியின் செல்வன் : அடுத்த மாதம் அஜித், மணிரத்னம் படப்பிடிப்புகள்


வலிமை, பொன்னியின் செல்வன் : அடுத்த மாதம் அஜித், மணிரத்னம் படப்பிடிப்புகள்
x
தினத்தந்தி 28 Nov 2019 12:00 AM GMT (Updated: 27 Nov 2019 7:35 PM GMT)

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை பட வேலைகள் தொடங்கி உள்ளன. நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், இரு வேடங்களில் வருவதாகவும் தகவல்கள் பரவி உள்ளன.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.

குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்கள். பார்த்திபன், ரகுமான், நிழல்கள் ரவி, பிரபு, மலையாள நடிகர் ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு டிசம்பர் 12-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வான நடிகர், நடிகைகள் அனைவரும் கதாபாத்திரத்துக்கு தங்களை மாற்ற கடும் பயிற்சிகள் எடுத்து வருகிறார்கள். தலைமுடியையும் நீளமாக வளர்த்துள்ளனர்.

Next Story