சினிமா செய்திகள்

சீன் கானரி + "||" + Sean Connery

சீன் கானரி

சீன் கானரி
ஜேம்ஸ் பாண்ட் - இந்த பெயருக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் எப்போதும் உண்டு. இந்த கதாபாத்திரத்தித்திற்கு உயிரூட்டம் அளித்தவர் நடிகர் சீன் கானரி. இவர்தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர்.
ஸ்காட்லாந்தில் உள்ள பவுண்டென்பிரிஜ் என்ற இடத்தில் பிறந்த சீன் கானரியின் தொடக்க காலம் அவ்வளவு நன்றாக இல்லை. 1930-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பிறந்த இவரது முழுப் பெயர், தாமஸ் சீன் கானரி. இவரது தந்தை ஜோ, லாரி ஓட்டுனர். தாய் ஈயூபாமியா ஒரு சலவைத் தொழிலாளி. வசதி இல்லாத குழந்தைகள் எப்படி வளர்வார்களோ, அப்படித்தான் சீன் கானரியும் வளர்ந்தார். வீட்டில் படுக்க இடம் இல்லாத காரணத்தால், ஒரு பெரிய பீரோவின் அடுக்கு ஒன்றில்தான் படுத்து தூங்குவார். இவர் நடிகராக வளர்ந்த பின் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் ஏழைகள்தான். ஆனால் எவ்வளவு மோசமான ஏழைகள் என்பதை விவரிக்க எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இவருக்கு எட்டு வயதானபோது, அவரது பெற்றோர்களுக்கு இன்னொரு மகன் பிறந்தான். அவன் பெயர் ‘நெயில்’ (NEIL). தான் போகும் இடங்களுக்கெல்லாம் தம்பியையும் இழுத்துச் செல்வார் சீன் கானரி. இருவரையும் தனித்துப் பார்ப்பதே கடினமான விஷயம்தான்.

சீன் கானரிக்கு மோசமான நண்பர்களின் சேர்க்கை காரணமாக, 13-வது வயதில் பள்ளிப் படிப்பு தடைபட்டது. அதனால் ஒரு பால் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, கடற்படையில் வேலை கிடைத்தது. 7 வருடம் ஒப்பந்தம். ஆனால் வயிற்றில் ஏற்பட்ட அல்சர் பிரச்சினையால், மூன்றாம் ஆண்டிலேயே அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் ஊருக்குத் திரும்பியதும், சவப்பெட்டிகளுக்கு பாலீஷ் போடுவது, கலைப் பள்ளியில் மாணவர்கள் வரையும் படங்களுக்கு மாடலாக நிற்பது என்று கிடைத்த வேலைகளைச் செய்தார். வருமானத்தில் ஒரு பகுதியை, வெயிட்லிப்டிங் கிளப்பில் சேர்வதற்காக சேமித்து வைத்தார். இவரது உடற்கவர்ச்சியைக் கண்டு, பல பெண்களுக்கு அப்போதே இவர் மீது மயக்கம் உண்டு. 1953-ம் ஆண்டு நடந்த ‘உலக அழகன்’ போட்டியில் கலந்துகொள்ள, உள்ளூர் நண்பர்களின் தூண்டுதலால் லண்டனுக்குப் பயணமானார்.

அங்கே இருந்த நீதிபதிகளிடம், தனது 6½ அடி உயரமுள்ள உடலை பல கோணத்தில் காண்பித்தார். ‘மிகவும் உயரமானவன்’ என்கிற தகுதியில் இவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. அப்போது அங்கு இருந்த உள்ளூர் சினிமா தயாரிப்பாளர் ஒருவர், சீன் கானரியின் உடற்கட்டு, உயரத்தைப் பார்த்து தன்னுடைய படக் கம்பெனியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். மேலும் அவர் அப்போது எடுத்துக் கொண்டிருந்த படத்தில் சிறு வேடத்திலும் நடிக்க வைத்தார். தொடர்ந்து டெலிவிஷன் நாடகங்களும், பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களிலும் நடித்தார்.

ஒரு கட்டத்தில் அவர் வீட்டுக் கதவை அதிர்ஷ்டம் தட்டியது. ஆம்.. ஹாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளரான இருவர், சீன் கானரியை தொடர்பு கொண்டு, தங்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தம் போட்டனர். ஹாரி சால்ட்மேன், அல்பர்ட் கப்பி பிரோக்கோலி என்னும் அந்த இரு தயாரிப்பாளர்களும், எழுத்தாளர் ஐயன் பிளம்மிங்கின் நாவல்களை படமாக்க அனுமதி பெற்று இருந்தனர். அதில் முதல் படம்தான் ‘டாக்டர் நோ.’ இதில் சீன் கானரி, ஜேம்ஸ் பாண்ட் என்னும் துப்பறிவாளனாக நடித்தார். அமெரிக்காவின் ஏவுகணைகளைத் தடுக்க முயற்சிக்கும் வில்லனை, கதாநாயகன் எப்படி வெற்றி கொள்கிறார் என்பதே இந்தப் படத்தின் சுவாரசியம் மிக்க கதை.

முதல் படம் மாபெரும் வெற்றியைப் பெறவே, இதே பாணியில் படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றியும் பெற்றன. 1963-ல் ‘பிரம் ரஷியா வித் லவ்’, 1964-ல் ‘கோல்ட் பிங்கர்’, 1965-ல் ‘தண்டர் பால்’, 1967-ல் ‘யூ ஒன்லி லைவ் ட்விஸ்’ ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரிசை கட்டின. இந்தப் படங்கள் அனைத்துமே கதைக்காகவும், அதில் இருந்த சுவாரசியங்களுக்காகவும் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனாலும் ஒரு கதாநாயகனின் நடிப்பும் முக்கியமல்லவா? அந்த நடிப்புத் திறமை சீன் கானரியிடம் இருந்தது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு, தயாரிப்பாளர் ஹாரி சால்ட்மேன் இப்படிச் சென்னார். “சீன் கானரியை நாங்கள் ஒப்பந்தம் செய்த போது, வழக்கமான ‘ஸ்கிரீன் டெஸ்ட்’ எடுக்கவே இல்லை. இவரது தோற்றமே எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.”

ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தவிர வேறு பல படங்களிலும் கூட சீன் கானரி நடித்தார். அவையும் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 1971-ம் ஆண்டு ‘டைமன்ட்ஸ் ஆர் பாரெவர்’ என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க சீன் கானரி அழைக்கப்பட்டார். அதன் பிறகான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரோஜர் மூர் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

6 ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்து விட்டதால், தனது இரண்டாவது மனைவி மிச்சலேனுடன் ஹாலிவுட் நகரை விட்டு வெளியேறினார். இங்கிலாந்து, மார்பெல்லா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் பெரிய பங்களாக்களில் தங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு சீன் கானரியைத் தேடிக் கண்டுபிடித்த ஜேம்ஸ் பாண்ட் பட தயாரிப்பாளர்கள், 1983-ம் ஆண்டு ‘நெவர் சே நெவர் அகேன்’ என்ற படத்தில் நடிக்க வைத்தனர். இதன் பிறகும் சீன் கானரிக்கு படங்கள் வரிசை கட்டின. வருடங்கள்தான் ஓய்வு பெற்று கடந்ததே தவிர, சீன் கானரி ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்தார்.

1990-ல் ரஷியாவில் இருந்து தப்பி வந்த ஒரு நீர்மூழ்கி கப்பலின் கேப்டனாக நடித்தார். ‘தி ஹன்ட் பார் ரெட் அக்டோபர்’ என்ற அந்தப் படம் உலகம் முழுவதும் 200 மில்லியன் டாலர்களை அள்ளியது. 1999-ம் ஆண்டு ‘என்ட்ரப்மென்ட்’ என்ற படம் வெளியானது. ஒரு திருடனின் காதலைப் பற்றிய சுவாரசியமான படம் இது. இந்தப் படத்தில் கேத்ரின் ஜேட்டா ஜோன்ஸ் என்ற இளம் கதாநாயகி நடித்தார். இந்தப் படம் வெளியானபோது, நாயகியை விட நாயகனுக்கு 40 வயது அதிகம் என்று விமர்சனம் எழுந்தது. சீன் கானரி எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் மார்க்கெட்டில் எந்த சரிவும் ஏற்படவில்லை. 2003-ம் ஆண்டு வரை நடித்தவர். தனது 80-வது வயதில் நடிப்புக்கு ஓய்வு கொடுக்கும் வரையில் உச்சத்திலேயே இருந்தார். 2013-ம் ஆண்டு ‘சார் பில்லி’ என்ற அனிமேஷன் படத்திற்கு குரல் மட்டும் கொடுத்தார்.

இவரது மனைவி மிச்சலேன், 1998-ல் மார்பெல்லா எஸ்டேட்டை விற்றபோது, வரி ஏய்ப்பு செய்து விட்டதாக சீன் கானரி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் அந்த தம்பதியர் பகாமாஸ் தீவுக்குச் சென்று அங்கேயே தங்கி சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 2008-ம் தன் வாழ்க்கையைப் பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர், சீன் கானரி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

மண வாழ்க்கை

1957-ல் சீன் கானரி, ஒரு டெலிவிஷன் நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் மிகவும் அழகான ஆஸ்திரேலியா நடிகை டையனி கிளின்டோ நடித்தார். நடிக்க வரும்போதே அவருக்கு மணமாகி இருந்தது. ஆனாலும் அவளது அழகில் சீன் கானரி மயங்கினார். டையனி, நடிப்பதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை என்றாலும், சமயம் கிடைத்த போதெல்லாம் சீன் கானரியின் உடல் அமைப்பு, நடிப்பை புகழ்ந்தார். “இவர் எனது நண்பராக வாய்த்தது என் பாக்கியம்” என்ற கருத்தை வெளியிட்டார். ஒரு முறை நோய் பாதிப்பில் படுத்த படுக்கையாக இருந்த டையனியை, படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் சீன் கானரி.

பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய அவர், டையனியை மறக்காமல் அவ்வப்போது அவரோடு உரையாடிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் டையனி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ததை அறிந்த சீன் கானரி, 1962-ம் ஆண்டு ஜிப்ரால்டா என்ற இடத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த மண வாழ்க்கை 10 ஆண்டுகள்தான் நீடித்தது. சீன் கானரியின் கோபம், எடுத்தெறிந்து பேசும் தன்மையால் அவர்களுக்குள் விரிசல் விழுந்தது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

1975 வருடம் மிச்சேல்டன் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இருவரும் பொராக்கோவில் நடந்த ஒரு கோல்ப் போட்டியின் போது சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.