சினிமா செய்திகள்

“அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் + "||" + "Avoid early morning travel" actor Actor Surya urges

“அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

“அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்
“கட்டுப்பாட்டை மீறி விபத்துகள் நடப்பதால், அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்” என்று நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை, 

கார்த்தி-ஜோதிகா அக்காள்-தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம், ‘தம்பி.’ ‘பாபநாசம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்துஜோசப் டைரக்டு செய்து இருக்கிறார். சவுகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் ஜோதிகா பேசியதாவது:-

அப்பா அம்மா முன்பு மேடையில் தமிழ் பேசறதுக்கு எனக்கு பயம். தம்பி எனக்கு படம் இல்ல. ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடித்த முதல் படம். என் அம்மா ஒரு நாள் ‘ஷூட்டிங்’ வந்தாங்க. அவங்கள நான் சாப்பிடுங்கனு சொன்னேன். ஆனால் அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் என்னோட பையன் படத்திற்கு வந்துருக்கேன்னு சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு.

கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விஷயம் சொல்ல வேண்டியது உள்ளது. அவரோட எல்லா படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். ரஜினி சார் கூட ‘சந்திரமுகி’ நடிச்சப்போ முதல் நாள் அவர் வந்து, “இது உன்னோட படம். நல்லா பண்ணு, ‘சந்திரமுகி’ பேரே உன்ன வச்சுதான்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே உணர்வு கார்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார்.

சத்யராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம். வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள், அம்மா நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல். இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். அவர் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குனரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும்.

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது கூறியதாவது:-

‘இரண்டு வருட உழைப்பு இந்த படத்துக்கு பின்னால் இருக்கிறது. இயக்குனர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அவ்வளவு இயல்பாக, நட்பாக இருந்தார். அப்புறம், அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தையும், உழைப்பும் பிரமிப்பு தருகிறது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. நடிச்சது சந்தோஷம்.

சத்யராஜ் மாமா இல்லாட்டி இந்த படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரியது. ‘கட்டப்பா’ வேடமெல்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. ‘கைதி’க்கு அப்புறம் இந்த படம் வருவது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம்.’

இவ்வாறு கார்த்தி கூறினார்.

நடிகர் சூர்யா பேசியதாவது:-

ரொம்ப நெருக்கமான படைப்பு, இது. சத்யராஜ் மாமா, ஜோ, கார்த்தி, சூரஜ் எல்லாரும் இணைந்து நடித்த படம். ஒரு சின்ன கரு இவ்வளவு பெரிய படமாக மாறியிருக்கிறது ஆச்சர்யமாக உள்ளது. கார்த்தி இப்படி படங்களை நம்பி நடிப்பது, பெருமையா இருக்கிறது. கார்த்தி, ஜோ இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள். கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது “நந்தா” படத்தில மட்டும் தான் என்னால அப்படி நடிக்க முடிஞ்சது.

ஆனால் கார்த்தி ‘கிளிசரின்’ போடாமல், அதை அநாயசமா செய்து விடுகிறார். ‘கைதி’ வரைக்குமே அதை நான் பார்த்துட்டு இருக்கேன். ரொம்ப எளிதாக செய்து விடுகிறார். ஜீத்து ஜோசப் ‘பாகுபலி’ அளவு பிரமாண்ட படத்திற்கு இணையாக, ‘பாபநாசம்’ படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனவர். அவர் இந்த படம் செஞ்சிருக்கறது, சந்தோஷம். படம் அழகா இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துகள்.

இறுதியாக ரசிகர்களுக்கு, உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள். எவ்வளவு அவசரம் இருந்தாலும் அதிகாலை பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள், 3 மணி, 4 மணிக்கு பயணம் செய்வதால் சில தவறான சம்பவங்கள் நடந்து விடுகிறது. நாம் நினைவுகள் இல்லாமல், நம் கட்டுப்பாட்டை மீறி சில விபத்துகள் நடந்து விடுகிறது. தயவு செய்து அதிகாலை பயணத்தை தவிர்த்து விடுங்கள்.

இவ்வாறு சூர்யா பேசினார்.