சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, டைரக்டர் பாரதிராஜா நடிகர் ஆகிவிட்டாரே... இனிமேல் டைரக்டு செய்வாரா, மாட்டாரா? (பி.விக்னேஷ் சாய், சென்னை–4)

டைரக்டராக புகழ் பெற்ற பாரதிராஜா, டைரக்‌ஷன் பணியை ஒருபோதும் மறக்க மாட்டார். இப்போது அவர் படங்களில் நடிப்பது, பணம் சம்பாதிக்க அல்ல...தன்னால் நடிகராகவும் பிரகாசிக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக...!

***

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கோவில் கோவிலாக சுற்றுகிறார்களே...என்ன வி‌ஷயம்? (ஆர்.பிரபாகரன், காஞ்சீபுரம்)

எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் தங்களை பாதிக்கக்கூடாது என்று இருவரும் கோவில் கோவிலாக போய் வேண்டிக்கொள்கிறார்களாம்!

***

குருவியாரே, ஆண்ட்ரியாவுக்கும், மற்ற கதாநாயகிகளுக்கும் என்ன வித்தியாசம்? (என்.தங்கராஜ், கரூர்)

மற்ற கதாநாயகிகளை விட, ஆண்ட்ரியாவுக்கு துணிச்சல் அதிகம். சண்டை காட்சிகளில் இவர், ‘டூப்’பை பயன்படுத்துவது இல்லை. எத்தனை பெரிய ‘ரிஸ்க்’ ஆன காட்சிகள் என்றாலும், அவரே நடிக்கிறார்!

***

மீனா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டாரே...இரண்டாவது ரவுண்டிலும் அவர் ஜெயிப்பாரா? (எஸ்.தினேஷ், பெங்களூரு)

மீனா, ‘‘நடிக்க மாட்டேன்’’ என்று எப்போது சொன்னார்? அவருக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்றால், உடனே நடிக்க சம்மதிக்கிறார்!

***

குருவியாரே, ‘பாகம்–2’ படங்களில் அதிக நாட்கள் ஓடி, அதிக வசூல் செய்த படம் எது? (எம்.சாஜஹான், துடியலூர்)

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா–2.’

***

நடிகர் செந்தில் டி.வி.சீரியலுக்கு வர காரணம் என்ன? (த.நேரு, வெண்கரும்பூர்)

அங்கேயும் தனது முத்திரையை பதிக்க விரும்புகிறாராம், செந்தில்!

***

குருவியாரே, கவிஞர் பா.விஜய் நடிப்பதை கைவிட்டு விட்டாரா? (கே.அன்புக்கரசன், பூந்தமல்லி)

தன்னை கவிஞராக ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், நடிகராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்...அதுவரை பா.விஜய் தன் முயற்சிகளை கைவிட மாட்டாராம்!

***

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இரண்டு பேரில், கடன்கள் இல்லாமல் பணத்தை சேமிப்பவர் யார்? (அகமது செரீப், அம்பாசமுத்திரம்)

விஜய் சேதுபதி! சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே செலவு செய்கிறார், சிவகார்த்திகேயன்!

***

குருவியாரே, தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக ஜெயிப்பதற்கு அழகு தேவையா, நடிப்பு திறமை தேவையா? (ஆர்.சுதர்சன், விருத்தாசலம்)

இரண்டும் இருந்தால், பெரிய அளவில் ஜெயித்து விடலாம்!

***

விக்ரம் பிரபு அப்பா பிரபுவுடன் இணைந்து நடிப்பாரா? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

ஒரு மகனுக்கும், தந்தைக்குமான கதை உங்களிடம் இருக்கிறதா? அப்படி இருந்தால், இருவருக்கும் அந்த கதையும், கதாபாத்திரங்களும் பிடித்து இருந்தால், பிரபுவும், விக்ரம் பிரபுவும் இணைந்து நடிப்பார்கள்!

***

குருவியாரே, சித்தாரா என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (வி.சுப்பிரமணியம், பி.கொமாரபாளையம்)

சித்தாரா, மிக சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகை. கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த அவர் பிற்காலத்தில் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்து வந்தார். இப்போது அவரை தேடி அம்மா வேடங்கள் வருகிறதாம். அம்மா வேடத்தில் நடிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம்!

***

சொந்த குரலில் பாடும் திறன் கொண்ட இசையமைப்பாளர்கள் யார்–யார்? (ஆறுமுகசாமி, திண்டுக்கல்)

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எஸ்.ஏ.ராஜ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, டி.இமான், எஸ்.எஸ்.குமரன் உள்பட பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அனைவரும் சொந்த குரலில் பாடியிருக்கிறார்கள்!

***

குருவியாரே, அந்தக்கால கவர்ச்சி நடன நடிகைகள் மத்தியில் போட்டி இருந்ததாக சொல்வார்கள். அப்படி போட்டி போட்ட கவர்ச்சி நடன நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கியவர் யார்? (வி.ஆபிரகாம் லிங்கன், குளித்தலை)

‘சில்க்’ சுமிதா! ஒரு படத்தில் ஒரே ஒரு கவர்ச்சி நடனம் ஆட ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர், இவர்தான்!

***

நகைச்சுவை நடிகர்கள் விவேக், சந்தானம் ஆகிய இருவரில், ‘சீனியர்’ யார்? (எம்.ஜானகிராமன், கோபிச்செட்டிப்பாளையம்)

விவேக்தான் சீனியர். சந்தானம் ஜூனியர்!

***

குருவியாரே, ஜோதிகா நடித்து மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதில் கதாநாயகன் யார்? (பி.செண்பக மூர்த்தி, மயிலாடுதுறை)

ஜோதிகா நடித்து மிக அதிக நாட்கள் ஓடிய படம், ‘சந்திரமுகி!’ அதில் கதாநாயகன், ரஜினிகாந்த் என்றாலும் ஜோதிகாவுக்கு ஜோடி, பிரபு!

***

வரலட்சுமி, ‘மக்கள் செல்வி’ என்றால் ‘மக்கள் செல்வன்’ யார்? (வி.விஜயகுமார், திருப்பூர்)

‘மக்கள் செல்வன்’ பட்டத்தை விஜய்சேதுபதி கைப்பற்றி இருக்கிறார்!

***

குருவியாரே, சிவா இயக்க, ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் மீனா, குஷ்பு ஆகிய இருவருக்கும் என்ன வேடங்கள்? (பெ.ராமகிருஷ்ணன், திருச்சி)

மீனா, குஷ்பு ஆகிய இருவருமே விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்மணிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது!

***

கவுண்டமணி இப்போதெல்லாம் திரைப்படங்களில் அதிகமாக நடிப்பதில்லையே...ஏன்? (கே.வாசுதேவன், உத்திரமேரூர்)

நடித்தவரை போதும்... இதுவரை நடித்திராத நல்ல வேடம் வந்தால் மட்டுமே நடிப்பது...என்ற முடிவுக்கு கவுண்டமணி வந்து விட்டாராம்!

***

குருவியாரே, சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? (ஏ.ரவீந்திரன், உடுமலைப்பேட்டை)

‘வால்டர் வெற்றிவேல்!’

***

யோகி பாபுவுக்கு திடீர் யோகம் வர என்ன காரணம்? (ஜி.கோபால், ஊட்டி)

அவருடைய தமாசான தலைமுடிதான் காரணம் என்கிறார்கள்!

***