குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:51 AM GMT (Updated: 2019-12-22T10:21:29+05:30)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, தமிழ் பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ரொம்ப கோபப்படுபவர் யார், மிக சாந்தமானவர் யார்? (பா.விஜயன், சென்னை)

ரொம்ப கோபப்படுபவர், நயன்தாரா. சாந்தமானவரும் அவர்தான்!

***

ஜோதிகா இவ்வளவு சரளமாக தமிழ் பேசுகிறாரே...அவருடைய தமிழ் ஆசான் யார்? (பி.வேல்முருகன், வேலூர்)

ஜோதிகாவின் தமிழ் ஆசான், அவருடைய கணவர் சூர்யாதான்! ஜோதிகாவுக்கு கிடைக்கும் பாராட்டுகள், புகழ் அனைத்தும் சூர்யாவுக்கே சொந்தம்!

***

குருவியாரே, கவுண்டமணியும், செந்திலும் எப்படி பொழுதை போக்குகிறார்கள்? (ஏ.வி.ராம்சுந்தர், திருச்சி)

கவுண்டமணி தனது ‘ஹோம் தியேட்டரில்’ நிறைய ஆங்கில படங்களை திரையிட்டு பார்க்கிறார்! செந்தில், டிவி. தொடரில் நடிக்க தொடங்கி விட்டார்!

***

கே.பாக்யராஜ் டைரக்டு செய்த முதல் படம் எது, அந்த படத்தின் கதாநாயகி யார்? (வி.ரவீந்தர், கோவை)

பாக்யராஜ் டைரக்டு செய்த முதல் படம், ‘சுவரில்லா சித்திரங்கள்.’ அந்த படத்தின் கதாநாயகி, சுமதி!

***

குருவியாரே, எம்.ஜி.ஆருடன் சிவகுமார் எந்த படத்தில் சேர்ந்து நடித்தார்? (என்.வேணி, திருவண்ணாமலை)

சிவகுமார், ‘காவல்காரன்’ படத்தில் முதல்முதலாக எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். அதன்பிறகு ‘இதயவீணை’ படத்திலும் எம்.ஜி.ஆருடன் சிவகுமார் இணைந்து நடித்தார்!

***

குறும்பட டைரக்டராக இருந்து வெண் திரைக்கு வந்து புகழ்பெற்ற இளம் டைரக்டர் யார்? (எஸ்.மனோகர், காஞ்சீபுரம்)

கார்த்திக் சுப்புராஜ். இவர் குறும்பட டைரக்டராக வாழ்க்கையை தொடங்கி, ‘பீட்சா’ படத்தின் மூலம் பிரபல டைரக்டராக உயர்ந்தார்!

***

குருவியாரே, ‘ரோஜா மலரே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? (கே.ராமச்சந்திரன், டி.கல்லுப்பட்டி)

ஸ்ரீகாந்துக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்!

***

கார்த்தியும், அவருடைய அண்ணி ஜோதிகாவும் ‘தம்பி’ படத்தில் இணைந்து நடித்தது போல் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிப்பார்களா? (ஆர்.கோதண்டராமன், குடியாத்தம்)

மிக விரைவில், உங்கள் விருப்பம் நிறைவேறும்!

***

குருவியாரே, தமிழ் பட உலகின் ‘கனவுக்கன்னி’களில் ஒருவரான திரிஷாவின் பூர்வீகம் எந்த ஊர்? எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் ஆங்கிலத்தில் பேசுகிறாரே...அவருக்கு தமிழ் பேச தெரியாதா? (சி.கோபால கிருஷ்ணன், கம்பம்)

திரிஷாவின் பூர்வீகம், கேரள மாநிலம் பாலக்காடு. அவர் வளர்ந்ததும் படித்ததும், சென்னையில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் ‘கெத்து’ என்று நினைக்கும் கதாநாயகிகளில், திரிஷாவும் ஒருவர்!

***

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்? (பி.முனிசாமி, திண்டுக்கல்)

கோலிவுட் படங்கள் ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் பயணிக்கின்றன!

***

குருவியாரே, என் அபிமான நடிகை பிரியாமணி மீண்டும் படங்களில் நடிப்பாரா? (வி.பி.மணி, மதுரை)

அவருக்கு பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் வந்தால், நிச்சயமாக நடிப்பாராம்! இப்போது அவர் வெல் சீரிசில் நடித்து வருகிறார்!

***

அழகான தோற்றமும், நடிப்பு திறமையும் இருந்தும் சிருஷ்டி டாங்கேவுக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே...ஏன்? (ஆர்.மாதேஷ்வரன், உடுமலைப்பேட்டை)

அவர் நடித்த ஆரம்ப கால படங்களின் ‘ரிசல்ட்’தான் முக்கிய காரணம். அழகும், திறமையும் இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என்று ஏற்கனவே அனுபவப்பட்ட நடிகைகள் கூறுகிறார்கள்!

***

குருவியாரே, ‘களவாணி’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வரும் ஓவியா எப்படிப்பட்ட சுபாவம்? (எம்.அகமது ஷெரீப், தஞ்சை)

வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல், எந்த ஒரு வி‌ஷயத்தையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் நடிகைகளில், ஓவியாவும் ஒருவர். இன்று இனிதே நடந்தது...நாளையும் அதுவே நடந்தால் நல்லது என்ற சுபாவம் கொண்டவர், ஓவியா!

***

கஸ்தூரி எந்த அரசியல் கட்சியிலாவது சேர்ந்து ஒரு கலக்கு கலக்குவார் என்று அரசியல் ஜோதிடர்கள் கூறுகிறார்களே...அது சரியா? (ஏ.சி.ஜோசப், தூத்துக்குடி)

தேர்தலுக்கு இன்னும் காலமும், நேரமும் நிறைய இருக்கிறது. அப்போது கஸ்தூரி ஒரு முக்கிய முடிவை எடுப்பாராம்!

***

குருவியாரே, விஜய் மகனும், விக்ரம் மகனும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பார்களா? (வி.சி.முருகேசன், கொண்டலாம்பட்டி)

‌ஷங்கர், மணிரத்னம் போன்ற பிரபல டைரக்டர் முயற்சி செய்து, அதற்கு எந்த தடைகளும் வராமல் இருந்தால், உங்கள் எதிர்பார்ப்பு வெற்றி பெறும்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘எங்க மாமா,’ ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களை தயாரித்த பட நிறுவனம் எது? அந்த படங்களின் கதாநாயகிகள் யார்? (மா.பாண்டியராஜன், அருப்புக்கோட்டை)

‘எங்கமாமா,’ ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய 2 படங்களையும் தயாரித்த பட நிறுவனம், ஜேயார் மூவீஸ். ‘எங்கமாமா’ படத்தின் கதாநாயகி, ஜெயலலிதா. ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் கதாநாயகி, மஞ்சுளா!

***

‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக...’’ என்ற பழைய பாடலை பாடிய பாடகர் யார்? (எம்.சீனிவாசன், ஸ்ரீரங்கம்)

கண்டசாலா!

***

குருவியாரே, சிம்புவை வைத்து படம் எடுக்க தயார் என்று யாராவது ஒரு டைரக்டர் சொல்வாரா? (கே.ரவி, குமாரபாளையம்)

‘‘ஒரே ஒரு நாளில் முழு படப்பிடிப்பையும் முடித்து விடலாம் என்றால், சிம்புவை வைத்து படம் இயக்க தயார்’’ என்று ஒரு பிரபல டைரக்டர் கூறுகிறார்!

***

சசிகுமார், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில் முரட்டுத்தனமான இளைஞர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் யார்? (வி.கே.சுந்தரமூர்த்தி, விருத்தாசலம்)

முரட்டு இளைஞர் கதாபாத்திரங்களில் சசிகுமார் நடித்து ஏற்கனவே நிரூபித்து விட்டார்!

***

Next Story