ரூ.1 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்


ரூ.1 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகை ஷாலினி பாண்டே மீது புகார்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:13 PM GMT (Updated: 2019-12-25T03:43:06+05:30)

ரூ.1 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக நடிகை ஷாலினி பாண்டே மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்க நவீன் இயக்கத்தில் தயாராகும் அக்னி சிறகுகள் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை டி.சிவா தயாரிக்கிறார்.

படத்தில் சில நாட்கள் நடித்து விட்டு திடீரென்று நடிக்க மறுத்து விட்டார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து டி.சிவா கூறியதாவது:-

“அக்னி சிறகுகள் படத்தில் கதாநாயகியாக ஷாலினி பாண்டேவை ஒப்பந்தம் செய்தேன். முந்தைய படமான 100 சதவீதம் காதல் படத்துக்கு ரூ.10 லட்சம்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் நான் 100 நாட்கள் நடிக்க ரூ.35 லட்சம் சம்பளம் பேசி முன் பணமாக ரூ.15 லட்சம் கொடுத்தேன்.

27 நாட்கள் நடித்த பிறகு இந்தியில் ரன்பீர்கபூர் படத்தில் நடிக்க போய் விட்டார். இந்தி படத்தில் நடிப்பதுதான் எனது இலக்கு. இனி அக்னி சிறகுகள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து ஷாலினி பாண்டே நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் படப்பிடிப்பை நடத்தினோம்.

ஷாலினி பாண்டேவால் ரூ.1 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.


Next Story