விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகள் கசிந்தன; படக்குழுவினர் அதிர்ச்சி


விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகள் கசிந்தன; படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 9 Jan 2020 11:45 PM GMT (Updated: 9 Jan 2020 9:13 PM GMT)

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன்தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு டெல்லியிலும், சென்னை பூந்தமல்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியிலும் நடந்தது. கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது சென்னையில் சிறைச்சாலை அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

மாஸ்டர் படம் கொரிய படத்தின் கதை என்று தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழுவினர் கொரிய படத்தின் கதையும் மாஸ்டர் கதையும் வெவ்வேறானவை என்றனர். இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு காட்சி வீடியோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் விஜய்சேதுபதி கேமராவை பார்த்து நடந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பை திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.

படக்காட்சிகள் வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் துணை நடிகர் நடிகைகள், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட யாரும் செல்போனை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளனர். 

Next Story