முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்


முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:45 PM GMT (Updated: 2020-01-14T02:05:56+05:30)

தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.

ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும் ஆத்திரப்படுகிறார்கள். சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.

நயன்தாராவும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய கஜினி படத்திலும் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. எனது சினிமா வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு அந்த படத்தில் நடித்ததுதான் என்றும் கூறியிருந்தார்.

கஜினி படத்தில் அசினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த படத்துக்கு பிறகு இந்தியில் அசின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இப்போது மீண்டும் தர்பார் படத்தில் தனது கதாபாத்திரத்தை சிதைத்து விட்டதாக அதிருப்தியில் இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

கன்னியாகுமரி பகவதி அம்மனின் மகிமைகளை சொல்லும் படமாக தயாராகிறது. பக்தி படம் என்பதால் விரதம் இருந்து நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Next Story