வருமான வரி சோதனை நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து?


வருமான வரி சோதனை   நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து?
x
தினத்தந்தி 23 Jan 2020 10:15 PM GMT (Updated: 2020-01-23T23:32:17+05:30)

நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறார். மகேஷ் பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு தெலுங்கு படம் கடந்த 11-ந்தேதி திரைக்கு வந்தது.

ராஷ்மிகாவின் வீடு கர்நாடக மாநிலம் குடகு விராஜ் பேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கணக்கில் காட்டாத ரொக்க பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். சோதனை நடந்தபோது ராஷ்மிகா வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்தார்.

ராஷ்மிகா விளம்பர நிறுவனம் நடத்தியதும், சில தொழில் நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. விராஜ் பேட்டையில் உள்ள ராஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்திலும் சோதனை நடத்தினர். நேரில் ஆஜராகும்படி நோட்டீசும் அனுப்பினர்.

இதை ஏற்று வருமான வரி அலுவலகத்தில் ராஷ்மிகா ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இந்த நிலையில் ராஷ்மிகா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவருக்கு ரூ.250 கோடிக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளதாகவும் இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Next Story