கவிஞரின் ஊர் பாசம்


கவிஞரின் ஊர் பாசம்
x
தினத்தந்தி 24 Jan 2020 2:40 PM GMT (Updated: 24 Jan 2020 2:40 PM GMT)

காரைக்குடி நாராயணன், புகழ்பெற்ற இயக்குனர் - தயாரிப்பாளர் - கதாசிரியர். தேசிய விருது பெற்ற ‘திக்கற்ற பார்வதி’ படத்திற்கு வசனகர்த்தா. 30 படங்களுக்கு கதை - வசனம் எழுதி இருக்கிறார்; ஆறு படங்களை சொந்தமாக தயாரித்து இயக்கி இருக்கிறார்.

காரைக்குடி நாராயணன், 1978-ம் வருடம் ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். படத்தின் பெயர் ‘மீனாட்சி குங்குமம்.’ இந்தப் படத்தின் தொடக்க விழாவை ஒரு பாடல் பதிவுடன் தொடங்க ஆசைப்பட்டு, பாடல் எழுதி வாங்க எங்களுடைய வீட்டுக்கு வந்தார்.

அப்பா அப்போது வீட்டில் இல்லை. “இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு வரமாட்டேன்” என்று சொல்லி விட்டு சென்றவர், தான் எங்கே இருக்கிறேன் என்பதை தன் உதவியாளர் வசந்தனிடம் மட்டுமே சொல்லி இருக்கிறார்.

“நான் எங்கே இருக்கேன்னு யார் கிட்டயும் சொல்லிடாதே. ரொம்ப ரொம்ப முக்கியம்னா மட்டும்தான் எனக்கு பேசணும்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து அப்பாவை தேடியபடி இருக்கிறார் காரைக்குடி நாராயணன். கடைசியாக வசந்தனிடம், “நாளை மறுநாள் படபூஜை வச்சிருக்கேன். கவிஞரை பார்த்தே ஆகணும்” என்று சொல்ல, வசந்தனும் கவிஞர் சென்னை மாரிஸ் ஓட்டலில் இருப்பதை சொல்லிவிட்டார்.

அப்பாவைத் தேடி காரைக்குடி நாராயணன், அவரது அறைக்கு போய் விட்டார். அவரைப் பார்த்ததும் அப்பாவுக்கு அதிர்ச்சி.

தன் அவசரத்தை சொல்லி, “அண்ணே.. என் டைரக்‌ஷன் சம்பந்தப்பட்ட வேலையைக் கூட விட்டுட்டு, உங்களைத் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கேன். என் படத்தோட பூஜை, ரிக்கார்டிங்குக்கு பாட்டு வேணும். நாளைக்கு கம்போசிங்” என்று கூறியிருக்கிறார்.

“யார் மியூசிக்?”

“சங்கர்-கணேஷ்”

“நம்ப பசங்கதான். நீ ஒண்ணு பண்ணு. நாளைக்கு சங்கர் கணேஷ் மட்டும் வந்தா போதும். பாட்டுக்கான சிச்சுவேஷனை மட்டும் அவங்கக்கிட்ட சொல்லிடு. நீ உன் டைரக்‌ஷன் சம்பந்தப்பட்ட வேலையைக் கவனி” என்றார் கவிஞர்.

“சரிண்ணே” என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விட்டார், காரைக்குடி நாராயணன்.

மறுநாள் கவிஞர் சொன்னபடி, சங்கர்-கணேஷ் வந்துவிட்டார்கள். அவர்களோடு, காரைக்குடி நாராயணன் இருப்பதைப் பார்த்துவிட்டு, “உன்னை பூஜை சம்பந்தமான வேலை இருந்தா அதைப் பாருன்னு சொன்னேனே” என்றார்.

“இல்லண்ணே.. பாட்டு எப்படி வேணும்னு நான் சொன்னா நல்லா இருக்கும், அதான்”

அப்பா பாட்டுக்கான சூழலைக் கேட்டுவிட்டு பாடல் வரிகளை சொல்ல ஆரம்பிக்கிறார்.

“ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ
வடிவேலனோ தெய்வானையோ
யார் வந்து பிறப்பார்கள்
கண்ணான என் செல்வமே”

கடகடவென்று பாடல் முழுவதையும் எழுதி முடித்துவிட்டார் அப்பா.

பிறகு காரைக்குடி நாராயணனைப் பார்த்து “பாட்டு எப்படி இருக்கு?” என்று அப்பா கேட்க...

“பாட்டு நல்லாதான் இருக்கு...” என்று காரைக்குடி நாராயணன் இழுக்க...

“அப்படின்னா?”

“இந்த டியூன் பழைய டியூனா இருக்கு”

“அப்படியா... டேய் பாட்டைப் பாடுங்க’ என்று அப்பா சொல்ல முழுப்பாடலையும் பாடுகிறார்கள், சங்கர்-கணேஷ். பாடலை திரும்ப கேட்டுவிட்டு “டியூன் நல்லாத்தானே இருக்கு” என்கிறார் அப்பா.

“இல்லண்ணே... ரொம்ப நாளைக்கு முன்னாடி, வி.குமார் மியூசிக்கில இதே மெட்டோட சாயல்ல ஒரு பாட்டு வந்து ஹிட் ஆகியிருக்கு. அதான் வேற டியூன் இருந்தா நல்லா இருக்கும்” என்றார், காரைக்குடி நாராயணன்.

“அந்தப் பாட்டை பாடுங்க” என்று சங்கர்-கணேஷைப் பார்த்து சொல்கிறார் அப்பா.

அவர்களும் தயக்கமாக “காதோடுதான் நான் பாடுவேன்” பாடலைப் பாடுகிறார்கள்.

“யார் எழுதுனது?”

“வாலி”

“நல்லா எழுதி இருக்காரு.. இங்க பாரு நாராயணன்.. இந்த மெட்டு சுகமா இருக்கு. ஏற்கனவே வந்த பாட்டு மாதிரி இருந்தா தப்பே இல்லை. நான் நிறைய பாத்திருக்கேன். இந்தப் பல்லவியை அப்படியே இதே மெட்டுல வச்சுக்கோ. சரணத்தை வேணும்னா மாத்திக்குங்க”

கவிஞர் சொன்ன பிறகு வேறென்ன சொல்ல முடியும். ‘சரி’ என்று தலையை ஆட்டுகிறார் காரைக்குடி நாராயணன்.

அப்பா கிளம்புகிறார். அவருடன் வெளியில் வந்து ஒரு கவரை அவர் கையில் தருகிறார் காரைக்குடி நாராயணன். “அண்ணே இதில 1500 ரூபாய் இருக்கு. இப்ப எங்கிட்ட இவ்வுளவுதான் இருக்கு. மீதியை பிறகு தரேன்.’

“பரவயில்லை” என்று அதை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்.

“அப்புறம்.. நீங்க தான் வந்து படத்தை தொடங்கி வைக்கணும்’

“வறேன், எங்க? என்னைக்கு?”

“ஏவி.எம். ஸ்டூடியோவில், காலையில 5.30 மணிக்கு பூஜை” என்கிறார்.

அப்பாவுக்கு அதிர்ச்சி.. அந்த நேரத்திற்கு அவர் எழுந்ததே இல்லை.

“அஞ்சரை மணிக்கு என்னால எப்படி வரமுடியும். கண்ணதாசன் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்ததே இல்லை. நேரத்தை மாத்தி வச்சுக்கோ.’

“இல்லண்ணே.. அந்த நேரத்தில தான் ஆரம்பிக்கணும்னு ஜோசியர் சொல்லி இருக்காரு. ஆரம்பிச்சு வைக்கிறது நீங்கதான்” என்று அழுத்தமாக சொல்கிறார், காரைக்குடி நாராயணன்.

சிறிது நேரம் யோசித்த அப்பா “சரி வரேன்” என்று சொல்கிறார். காரைக்குடி நாராயணன் சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.

காரைக்குடி நாராயணன் தன் படத்தின் தொடக்க விழாவிற்கு அழைப்பிதழ்களை தயார் செய்து நண்பர்கள், தெரிந்தவர்கள் அனைவருக்கும் தந்துகொண்டிருந்தார்.

ஏவி.எம்.சரவணனை சந்தித்தும் அழைப்பிதழை தந்தார். அதை பிரித்துப் பார்த்த ஏவி.எம்.சரவணனுக்கு அதிர்ச்சி. தொடங்கி வைப்பவர் கவியரசு கண்ணதாசன், நேரம் காலை 5.30 மணி என்று இருந்தது.

“நாராயணன், கவிஞர்கிட்ட நல்லா கேட்டீங்களா?, நேரம் காலையில 5.30 மணிக்கு என்று சொன்னீர்களா?” என்று கேட்டார் ஏவி.எம்.சரவணன்.

“கவிஞர்கிட்ட கேட்டுட்டுதான் அவர் பெயரை போட்டேன், ஏன்?” காரைக்குடி நாராயணன்.

“இல்லை கவிஞர் காலையில 10 மணிக்கு முன்னால கம்போசிங்கிற்கு வரதே கஷ்டம். எங்க படங்களோட பாடல் கம்போசிங்க்கிற்கு அவர் 10 மணிக்கு முன்னால வந்தது இல்லை. அதுதான் அவரோட வழக்கமான நேரம்."

“கவிஞர் நிச்சயமா வந்திடுவாரு” நம்பிக்கையோடு சொல்கிறார் காரைக்குடி நாராயணன்.

ஏவி.ஏம்.சரவணன் புன்னகைக்கிறார். ‘எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள். கவிஞரை அழைத்துவர அவர்களின் தயாரிப்பு நிர்வாகிகள் பட்டபாடு. இதெல்லாம் காரைக்குடி நாராயணனுக்கு எப்படி தெரியும்?’ என்பது அந்தப் புன்னகையில் அடங்கி இருந்தது.

பூஜை அன்று அதிகாலை. அனைவரும் வந்துவிட்டனர். கவிஞரைக் காணோம். நேரம் 5.20-ஐ தாண்டுகிறது. காரைக்குடி நாராயணனுக்கு டென்ஷன்.

பூஜைக்கு வந்து அமர்ந்து இருக்கின்ற ஏவி.எம்.சரவணனைப் பார்க்கிறார்.

“கவிஞர் 5.30 மணிக்கு வரமாட்டார் என்று நான் அப்போதே சொன்னேனே” என்பது போல அவரைப் பாவமாக பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் ஏவி.எம்.சரவணன்.

இன்னும் சிறிது நேரம் பார்ப்போம், கவிஞர் வரவில்லை என்றால் வேறு வழியில்லை பூஜையை தொடங்கிவிடுவோம் என்று முடிவு செய்கிறார் காரைக்குடி நாராயணன்.

“நல்ல நேரம் இருக்கும்போதே பூஜையை ஆரம்பிங்க” என்கிறார் ஏவி.எம்.சரவணன்.

சரி, என்று காரைக்குடி நாராயணனும் பூஜையை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்தபோது, கவிஞரின் கார் உள்ளே நுழைகிறது.

அனைவருக்கும் ஆச்சரியம். அவ்வளவு ஏன் பூஜை செய்ய வந்த ஐயருக்கே ஆச்சரியம்.

கவிஞர் வந்து படத்தை தொடங்கிவைக்கிறார். விழா இனிதே நடந்து முடிகிறது.

ஏவி.எம்.சரவணன் அப்பாவிடம் வந்து, “காலையில 5.30 மணிக்கு நீங்க வந்து படத்தை ஆரம்பிச்சு வைப்பிங்கன்னு காரைக்குடி நாராயணன் சொன்னார். நிச்சயமா நீங்க வரமாட்டீங்க, உங்களால அந்த நேரத்துக்கு வரமுடியாதுன்னு நான் சொன்னேன். உண்மையிலேயே இது எனக்கு ஆச்சரியம்தான். எப்படி இவ்வளவு காலையில எந்திரிச்சு வந்தீங்க?” என்று கேட்டார்.

அதற்கு அப்பா “சரவணன்.. உங்க அப்பா, நான் இன்னும் பல பேர் காரைக்குடியில இருந்து மெட்ராஸுக்கு வந்து பல்வேறு தொழில்கள்ல ஈடுபட்டு, சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கோம். ஆனா நாம யாரும் நம்ம சொந்த ஊருக்கு பெருமை சேர்க்கிற மாதிரி, நம்ம பேருக்கு முன்னாடி ‘காரைக்குடி’ன்னு போட்டுகிட்டு இருக்கோமா? இல்லையே. ‘பட்டுக்கோட்டை’ கல்யாணசுந்தரம், ‘உடுமலை’ நாராயணகவி.. இவங்க எல்லாம் அவங்க மண்ணுக்கு மரியாதை சேர்க்கிறமாதிரி, அவங்க பெயரோட மண்ணையும் இணச்சுக்கிட்டாங்க. அதைத்தான் இந்த காரைக்குடி நாராயணனும் செஞ்சு இருக்கான். அந்த ஒரு காரணத்துக்காகத் தான், நான் இன்னைக்கு ரொம்ப கஷ்டப்பட்டு அதிகாலையில கண்விழிச்சு வந்து இந்த விழாவுல கலந்துகிட்டு இருக்கேன்” என்றார்.

-தொடரும்.

Next Story