சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் எப்போது திரைக்கு வரும்? (மோகன், கோவை–58)

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் எப்போது திரைக்கு வரும் என்ற தகவல், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியம்!

***

விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது ஏன்? (கோ.செண்பக மூர்த்தி, கடலூர்)

நிச்சயமாக கலைச்சேவை செய்வதற்கு அல்ல; சம்பளம் அதிகமாக கிடைப்பதால்தான்...!

***

குருவியாரே, வடிவேல் இடத்தை யோகி பாபுவால் நிரப்ப முடியுமா? (எஸ்.கதிர்வேலன், திண்டுக்கல்)

யோகி பாபு இப்போதுதானே வந்திருக்கிறார்...நிரப்புவதற்கு இன்னும் காலமும், நேரமும் நிறைய இருக்கிறது!

***

‘டகால்டி’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள ரித்திகா சென் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

ரித்திகாசென், கொல்கத்தாவை சேர்ந்தவர். ஆனால், அவர் வசிப்பது மும்பையில்...!

***

குருவியாரே, இரண்டாம் பாகம் எடுத்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் எது? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

காஞ்சனா–2, பாகுபலி–2 ஆகிய 2 படங்களுமே வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தின!

***

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் என்ன கதையம்சம் கொண்ட படம்? (எம்.வெங்கடேஷ், கோபிசெட்டிப்பாளையம்)

காதல், மோதல், குடும்ப பாசம் ஆகியவை சரிசம விகிதத்தில் கலந்த விவசாயிகளின் கதை!

***

குருவியாரே, சரத்குமார் இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? அவற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்கள் எவை? (ஆர்.தனபால், பெருங்களத்தூர்)

சரத்குமார் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள்: சூரியன், ஐயா, நம்ம அண்ணாச்சி, நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக...

***

‘ஆராதனா’ இந்தி படத்தை தழுவி தமிழில் வந்த படம் எது? அந்த படத்தில் நடித்தவர்கள் யார்? (ஆர்.டேனியல், எட்டயபுரம்)

‘ஆராதனா’ படத்தை தழுவி தமிழில் வந்த படம், ‘சிவகாமியின் செல்வன்.’ அந்த படத்தில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, லதா, ஏவி.எம்.ராஜன் ஆகியோர் நடித்து இருந்தார்கள்!

***

குருவியாரே, பெரிய திரை, சின்னத்திரை ஆகிய இரண்டு திரைகளிலும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை சொல்ல முடியுமா? (கே.துரைராஜ், பெங்களூரு)

‘கலையரசி’ ராதிகா! பெரிய திரை, சின்னத்திரை ஆகிய இரண்டிலும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்!

***

தமிழ் திரையுலகில் பயங்கர திகில் மற்றும் திடுக்கிடும் மர்மங்களை கொண்ட படம் எது? அதில் கதாநாயகன்–கதாநாயகி யார்? (ஏ.செல்வகுமார், அரியலூர்)

தமிழ் திரையுலகில் திடுக்கிடும் மர்மங்களை கொண்ட முதல் திகில் படம், ‘அதே கண்கள்.’ அதில் ரவிச்சந்திரன் கதாநாயகனாகவும், காஞ்சனா கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்கள்.

***

குருவியாரே, மணிரத்னம் டைரக்‌ஷனில் ரேவதி நடித்து இருக்கிறாரா? (வி.சம்சுதீன், கொரட்டூர்)

‘அஞ்சலி’ படத்தை நீங்கள் பார்க்கவில்லையா?

***

‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனி என்ன வேடத்தில் நடித்து இருக்கிறார்? (டி.மார்ட்டின், தூத்துக்குடி)

அந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, சசிகுமார்–ஜோதிகா ஆகிய இருவரும் அண்ணன்–தங்கையாக நடித்து வரும் படம் எது? (வெ.தனராஜ், மதுரை)

அந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை!

***

பொள்ளாச்சி, தெலுங்கானா சம்பவங்களை கருவாக வைத்து படம் தயாராகிறதா? (என்.ரவீந்திரன், மேட்டூர்)

ஓசையில்லாமல் ஒரு படம் தயாராகி வருகிறது!

***

குருவியாரே, யோகி பாபு, அப்புக்குட்டி ஆகிய இரண்டு பேருடனும் சில கதாநாயகிகள் நடிக்க மறுத்து விட்டார்களாமே...ஏன்? (இரா.சரவணன், முல்லைக்காடு)

இரண்டு பேரின் தலைகளை பார்த்து பயந்து விட்டார்களாம்!

***

சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ‘சிரிப்பழகி’ சினேகா தொடர்ந்து நடிப்பாரா? எஸ்.கல்யாண், கம்பம்)

கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பின், சினேகா நடிப்பை தொடர்வாராம்!

***

‘‘கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா...’’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயாசிங், மீண்டும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடுவாரா? (எஸ்.ரகுராமன், திருநின்றவூர்)

சாயாசிங் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால், ஆடுவதில் எந்த தயக்கமும் இல்லையாம்!

***

குருவியாரே, அஜித்குமார் நடித்து வரும் ‘வலிமை’ எந்த மாதிரியான படம்? அதில் அவர் என்ன வேடத்தில் நடிக்கிறார்? (வி.இசக்கி முத்து, தேவகோட்டை)

‘வலிமை,’ குடும்ப பாசத்துடன், அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட படம். அதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்!

***

எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு படத்தை இயக்குவாரா? (டி.கேத்தரின், பாளையங்கோட்டை)

அதற்கான வேலைகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபட்டு இருக்கிறார். அதற்கான அறிவிப்பு மிக விரைவில் வரும்!

***

குருவியாரே, சமீபத்தில் திரைக்கு வந்த ‘சைக்கோ’ படத்தில், பல கொலைகளை கொடூரமாக செய்யும் குற்றவாளி மன்னிக்கப்படுவது போல், படத்தின் இறுதி காட்சியை அமைத்து இருக்கிறார்களே...அது சரிதானா? (ஜி.கே.பாலமுருகன், கோத்தகிரி)

படத்தின் ஒரே பலவீனம், அந்த இறுதி காட்சிதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. சரியான முடிவுதான் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். இது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது!

***

‘‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அதில் நடித்தவர் யார், பாடியவர் யார்? (எம்.சின்னதுரை, உடுமலைப்பேட்டை)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘சவாலே சமாளி.’ பாடல் காட்சியில் நடித்தவர், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா. பாடலை பாடியவர், பி.சுசீலா!