சினிமா செய்திகள்

குழந்தை பிறந்த பின்பும் குறையாத இளமை + "||" + Even after the baby is born Undeniably youthful

குழந்தை பிறந்த பின்பும் குறையாத இளமை

குழந்தை பிறந்த பின்பும் குறையாத இளமை
இப்போது மீராவுக்கு 37 வயது. முதலில் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்தார். அடுத்து ஜான்கோகனை திருமணம் செய்தார்.
டிகைகளின் வாழ்க்கையிலும், சராசரி பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் உயர்வும்- தாழ்வும்- தவறுகளும்- சிக்கல்களும்- திருப்பங்களும் நிகழத்தான் செய்யும். அதற்கு நிகழ்கால உதாரணங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை மீரா வாசுதேவன். மும்பையில் விளம்பர மாடலாக ஜொலித்துக்கொண்டிருந்த இவர், 22 வயதில் ‘தன்மாத்ரா’ என்ற மலையாள சினிமா மூலம் திரை உலகில் கால்பதித்தார். மோகன்லாலுடன் நடித்த அந்த முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டார். அவர் 18 வயது மகனுக்கு அம்மாவாக அந்த இளம் வயதிலே நடித் ததுதான் அதற்கு காரணம். உன்னை சரணடைந்தேன், கத்திக் கப்பல், அடங்கமறு போன்ற சினிமாக்கள் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்.

இப்போது மீராவுக்கு 37 வயது. முதலில் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்தார். அடுத்து ஜான்கோகனை திருமணம் செய்தார். இரண்டு விவாகரத்துக்களுக்கு பிறகு இப்போது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களை பற்றியும் மனந்திறந்து சொல்கிறார்:

நான் நடிகையானதே ஒரு ஆச்சரியமான அனுபவம்தான். 2003-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த காலகட்டத்தில் நான் ‘ஓம் கிரிக்கெட்டாய நமா..’ என்று தொடங்குகின்ற கிரிக்கெட் விளம்பரம் ஒன்றில் நடித்தேன். அது பெரும் வரவேற்பை பெற்றது. அதை பார்த்துவிட்டு டைரக்டர் பிளெஸ்சி என்னை சந்திக்க விரும்பினார். மும்பைக்கு அவர் என்னை காணவந்தபோது நான் ஜீன்ஸ், டாப் அணிந்து கூந்தல் முழுவதையும் கலரிங் செய்து அட்டகாசமாக காட்சியளித்தேன்.

அவர் தன்மாத்ராவின் கதையை என்னிடம் சொன்னதும் நான் குழம்பிப் போனேன். ‘இந்த இளம் வயதில் இரண்டு பிள்ளைகளின் அம்மாவாக என்னால் எப்படி நடிக்க முடியும்? கேரளாவில் அழகான அம்மா நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் இதில் நடித்தால் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்று கேட்டேன். ‘என் மீது நம்பிக்கை இருந்தால் நீ வரலாம்’ என்றார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

முதல் படத்தில் கிடைத்த புகழை இப்போதும் நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். தன்மாத்ராவில் நான் நடித்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இப்போதும் லேகா என்ற கதாபாத்திரத்தின் பெயரை கூறிதான் ரசிகர்கள் என்னை அழைக்கிறார்கள். ரசிகர்கள் இப்போதும் என்னை மறக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் லேகா என்று என்னை அழைக்கவே நான் ஆசைப்படுகிறேன்.

அந்த படத்தில் நடித்தபோது எனக்கு 22 வயது. என் மகனாக நடித்தவருக்கு என்னைவிட நான்கு வயதுதான் குறைவு. அப்போது எனக்கு மலையாளம் தெரியாது. அதை தெரிந்துகொண்டு மோகன்லால் எனக்கு பலவிதங்களில் உதவிசெய்தார். அதை எல்லாம் நான் கடவுள் அனுக்கிரகம் என்றே கருதுகிறேன்.

தன்மாத்ராவிற்கு பிறகு எனக்கு நிறைய மலையாள பட வாய்ப்புகள் வந்தன. மொழியை புரிவதில் சிக்கல்கள் இருந்ததால், ஒரு மேனேஜரை நியமித்தேன். அதுதான் நான் செய்த பெரிய தவறாகிவிட்டது. அவர் தனது தனிப்பட்ட விருப்பங்களுக்காக என் தொழிலை பயன்படுத்திக்கொண்டார். அவரது பேச்சை நம்பி, கதை கேட்காமலே நான் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். அவரை நம்பி நடித்த படங்கள் எல்லாம் பெரும்தோல்வியை சந்தித்தன. பிரபலமான டைரக்டர்கள் பலர் என்னை நடிக்க அணுகியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பல்வேறு காரணங்களை கூறி அவர் தட்டிக்கழித்திருக்கிறார். அந்த வாய்ப்புகளை எல்லாம் அவருக்கு பிடித்த நடிகைகள் பயன்படுத்திக்கொள்ள துணைபுரிந் திருக்கிறார். நான் மும்பையில் இருந்ததால் இந்த விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாமல் போய்விட்டது. இப்போது எனக்கு சுப்ரியா என்ற தோழி இருக்கிறார். அவர் எனது சகோதரி போன்றவர். என் விஷயங்களை எல்லாம் அவர்தான் கவனித்துக்கொள்கிறார்.

நான் 17 வயதுகளில் ரொம்ப குண்டாக இருந்தேன். அப்போது என் கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். நேரம் கிடைத்ததும் அதை விரித்து படிக்கத்தொடங்கி விடுவேன். அதனால் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் படிப்பாளியாக நினைப்பார்கள். கல்லூரியில் படிக்கும்போது நாடகங்களை இயக்கத்தொடங்கினேன். நடன வடிவமைப்பு செய்யும் திறமையும் என்னிடம் இருந்ததை உணர்ந்தேன். அதெல்லாம் இருந்ததால் சினிமாவிலும் முயற்சிக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு முதல்வேலையாக உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன்.

உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுடல் ஆனதும், ‘ஆஹா நானும் அழகாக இருக்கிறேனே!’ என்ற எண்ணம் எனக்கு உருவானது. என் தந்தையிடம் சென்று நான் நடிக்கப்போகிறேன் என்று சொன்னேன். குடும்பத்தினர் அனைவரும் சம்மதித்தார்கள். முதலில் விளம்பர படங்களில் நடித்தேன். அதன்பின்பு பிரபல இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடித்ததும், சினிமாவில் இருந்து அழைப்பு வந்தது. ‘ரூல்ஸ் பியார் கா சூப்பர்ஹிட் பார்முலா’ எனது முதல் இந்திபடம்.

நான் ஐதீக குடும்பத்தை சேர்ந்தவள். அப்பா வாசுதேவன், அம்மா ஹேமலதா இருவரும் அரசு பணியில் இருந்தார்கள். மும்பையில் நாங்கள் வசித்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு கொச்சியில் பெற்றோர் என்னோடு வசிக்கிறார்கள். மகன் அரீகா பள்ளியில் படிக்கிறான். அவன்தான் என் உலகம். எனது தந்தை பாடல்கள் எழுதுவார். அம்மா ஓவியம் தீட்டுவார்.

எனது இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்ததை நான் நினைத்துப்பார்க்கவே விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயம் விவாகரத்து என்றாலே சமூகம் பெண்களைதான் குற்றவாளியாக பார்க்கிறது. அதனால் பெண்கள் அடையும் வேதனையை யாரும் புரிந்துகொள்வதில்லை. 2005-ல் முதல் திருமணம் நடந்தது. கணவர் மூலம் அடைந்த மனரீதியான, உடல்ரீதியான உபத்திரவங்கள் கற்பனைகூட செய்துபார்க்க முடியாதது. எனது உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்ததால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்துகொண்டேன். மனோரீதியாக ஒத்துப்போக முடியாததால் அந்த உறவும் நிலைக்கவில்லை. ஆனால் அவர் எனது மகனின் அப்பா. அவனுக்கு நாங்கள் இருவரும் தேவை.

2014-ல் நான் குழந்தையை பெற்றெடுத்தேன். தாய்மையடைந்த நாளில் இருந்து என் உடல் எடை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. பிரசவித்தபோது 95 கிலோ எடை இருந்தேன். மீண்டும் இயல்பான எடைக்கு திரும்பவழியில்லை என்று நான் பயந்தேன். வெறித்தனத்தோடு ஜிம்முக்கு சென்றேன். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தேன். முயற்சி கைகொடுத்தது. 35 கிலோ எடை குறைந்தது. இப்போதும் நேரம் செலவிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறேன். உடற்பயிற்சியில் அதிக சக்தி கிடைக்கிறது.

குழந்தை பிறந்த பின்பும், குறையாத இளமையுடன் நடிகைகள் திகழ வேண்டும். அழகும், இளமையும் பெண்களுக்கு மிக அவசியம். நானும் அழகில் அதிக கவனம் செலுத்துகிறேன்.கடந்த ஐந்து வருடங்களில் எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் குழந்தை. அவனுக்காகவே நான் வாழ்ந்துகொண்டிருக் கிறேன். நான் ஒவ்வொரு நாளும் என் மகனுக்காக ஒவ்வொரு கதை எழுதுகிறேன். அந்த கதைகளை எல்லாம் நான் சேர்த்துவைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் அதை புத்தகமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.