கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்


கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீன பெண்ணை கரம் பிடித்த இந்திய இளைஞர்
x
தினத்தந்தி 3 Feb 2020 8:47 PM GMT (Updated: 3 Feb 2020 8:47 PM GMT)

உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் குறித்த பீதியில் இருக்கும் நிலையில் இந்திய இளைஞர் ஒருவர், அந்த நாட்டு பெண்ணை காதலித்து கரம் பிடித்துள்ளார்.

போபால்,

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகர மீன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனா என்ற ஒரு வகை கொடிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர் உள்பட 25 நாடுகளில் பரவி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன.

உலக நாடுகள் அனைத்துமே பீதியில் உள்ள நிலையில் இந்தியாவில் ஒரு அழகான சீன காதல் திருமணமும் அரங்கேறியுள்ளது. ஆம், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் சீன பெண் ஒருவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். கனடா நாட்டில் படிக்கும்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவருக்கும், சீனாவின் ஜிஹாவோ வாங் என்ற பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி மணப்பெண்ணான ஜிஹாவோ வாங், அவரது தந்தை சிபோ வாங், தாயார் ஜின் குவான் மற்றும் 2 உறவினர்கள் கடந்த புதன்கிழமை மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சார் நகருக்கு வந்தனர். அப்போது மத்தியபிரதேச மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சாரில் சத்யார்த் மிஸ்ராவுக்கும், சீன ஜிஹாவோ வாங்குக்கும் இரு வீட்டார் முன்னிலையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்திய முறைப்படி மணப்பெண்ணிற்கு, சத்யார்த் மிஸ்ரா தாலி கட்டினார்

இதுகுறித்து சீன பெண் ஜிஹாவோ வாங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் கனடாவில் ஒரு கல்லூரியில் சந்தித்தோம். நான் கல்லூரிக்கு வந்தபோது, அவர் (சத்யார்த் மிஸ்ரா) எனக்கு நிறைய உதவிகள் செய்தார். பின்பு நாங்கள் 5 ஆண்டுகளாக காதலித்தோம். பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தற்போது அதை நிறைவேற்றி இருக்கிறோம். என் உறவினர்கள் 4 பேர் திருமணத்திற்காக சீனாவிலிருந்து வரவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சினையால் விசா பெற முடியவில்லை. எனவே, அவர்கள் திருமணத்திற்கு வர இயலவில்லை” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “சீனாவில் நாங்கள் வசிக்கும் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. அதனால் எத்தனை மருத்துவ பரிசோதனை செய்ய விரும்பினாலும் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றும் குறிப்பிட்டார்.

சத்யார்த் மிஸ்ரா-ஜிஹாவோ வாங் தம்பதிக்கு சீனாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கும் இந்த காதல் தம்பதி முடிவு செய்துள்ளனர்.


Next Story