ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்


ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
x
தினத்தந்தி 5 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-06T02:20:55+05:30)

ஜி.வி.பிரகாஷ் ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். அவருடன் டிராபிக் தண்டர், பர்சி ஜாக்சன், பிக் மாமா ஹவுஸ் போன்ற ஆங்கில படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி.ஜாக்சனும் நடிக்கிறார். கிலிப்டன், எரிகா பின்கெட், நெப்போலியன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்

இந்த படத்தை ரிக்கி பர்செல் எழுதி இயக்கி உள்ளார். போதை பொருள் கும்பல் தலைவனிடம் வேலை பார்க்கும் ராப் பாடகன் பற்றிய கதை. கைபா பிலிம்ஸ் சார்பில் அமெரிக்க தமிழர் டெல் கே.கணேசன் தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 170 நாடுகளில் இந்த படம் திரைக்கு வருகிறது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது:-

“ஹாலிவுட் படமான டிராப் சிட்டியில் பிராண்டன் டி.ஜாக்சனுடன் இணைந்து நடித்தது வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். இந்த படத்தில் போதை பொருள் கும்பலில் இருக்கும் ராப் பாடகருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக வந்து அவருக்கு அறிவுரைகள் சொல்வதுபோல் எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கதைக்கு திருப்பு முனையாகவும் இருக்கும். படத்தின் இசையிலும் எனது பங்களிப்பு உள்ளது.

இதுவரை 75 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். 380 பாடல்கள் வந்துள்ளன ஜெயில், ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள் படங்களில் நடித்து முடித்துள்ளேன்.”

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

Next Story