சினிமா டப்பிங் யூனியன் தலைவர்: ராதாரவி தேர்வை எதிர்த்து வழக்கு -பாடகி சின்மயி


சினிமா டப்பிங் யூனியன் தலைவர்:   ராதாரவி தேர்வை எதிர்த்து வழக்கு   -பாடகி சின்மயி
x
தினத்தந்தி 6 Feb 2020 10:45 PM GMT (Updated: 6 Feb 2020 9:20 PM GMT)

டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட நடிகர் ராதாரவி, பின்னணி பாடகி சின்மயி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சின்மயி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக கூறி அவர் மனுதாக்கல் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மனுக்கள் பரிசீலனையில் சின்மயி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராதாரவி மீண்டும் டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“நான் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருக்கிறேன். அதனால்தான் திரைப்படங்களில் டப்பிங் கொடுத்து வருகிறேன். கடைசியாக ‘ஹீரோ’ படத்தில் பேசியிருக்கிறேன். பின்னர் எப்படி என்னை உறுப்பினர் இல்லை என்று சொல்லலாம்? 2016-17-ம் ஆண்டுகளிலும் நான் உறுப்பினர் இல்லை என்கிறார்கள். டப்பிங் கலைஞர்கள் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணத்தை பிடித்தம் செய்தே சங்கத்தை நடத்தினர்.

நான் உறுப்பினராக இல்லாதபோது, அந்த காலகட்டங்களில் வெளியான படங்களில் நான் டப்பிங் எப்படி கொடுத்திருக்க முடியும்? நான் உறுப்பினராக இல்லாதபோது படங்களில் டப்பிங் பேச விட்டிருப்பார்களா? எனது வேட்புமனுவை தள்ளுபடி செய்தது பெரிய சூழ்ச்சி.? ராதாரவி குறுக்கு வழியில் வெற்றி பெற்றதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.”

இவ்வாறு சின்மயி கூறினார்.

Next Story