சினிமா செய்திகள்

திருமணத்துக்கு திரையுலகினரை அழைக்காதது ஏன்? நடிகர் யோகிபாபு விளக்கம் + "||" + Actor Yogibabu Description

திருமணத்துக்கு திரையுலகினரை அழைக்காதது ஏன்? நடிகர் யோகிபாபு விளக்கம்

திருமணத்துக்கு திரையுலகினரை அழைக்காதது ஏன்?  நடிகர் யோகிபாபு விளக்கம்
ரகசிய திருமணம் நடந்தது ஏன்? என்பது குறித்து நடிகர் யோகிபாபு விளக்கம் அளித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மஞ்சு பார்கவி என்பவரை ஆரணி வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. பத்து பதினைந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பெண் வீட்டார் தரப்பில் யாரும் வரவில்லை என்றும் தகவல் பரவியது.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரை அழைக்கவில்லை. திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவலையும் டுவிட்டரில் யோகிபாபு மறுத்தார். திருமணம் முடிந்ததும் அதை ஏன் மறைத்தார்? பட உலகினரை திருமணத்துக்கு எதற்காக அழைக்கவில்லை என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் ரகசிய திருமணம் நடந்தது ஏன்? என்பது குறித்து யோகிபாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“எனது திருமணத்துக்கு எல்லோரையும் அழைக்க முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரையும் அழைக்கும் நிலையில் நான் இல்லை. திருமணம் சம்பந்தமான முடிவுகளை எனது குடும்பத்தினரே எடுத்தனர்.

திருமணத்துக்கு அழைக்கவில்லை என்று திரையுலகை சேர்ந்தவர்கள் கோபத்தில் இருக்கலாம். அவர்கள் எனது நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மார்ச் மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். அப்போது அனைவரையும் அழைப்பேன்.”

இவ்வாறு யோகிபாபு கூறினார்.