மூச்சுமுட்டவைத்த முதல் காதல்


மூச்சுமுட்டவைத்த முதல் காதல்
x
தினத்தந்தி 9 Feb 2020 3:30 AM GMT (Updated: 8 Feb 2020 12:24 PM GMT)

முதல் காதல் அனுபவங்கள் பிரபல நடிகைகளை மூச்சுமுட்டவைத்திருக்கிறது. அதை சொல்லும்போதே அவர்கள் சிலிர்த்துப்போகிறார்கள். அதை கேட்கும்போது சிரிப்போடு சிந்தனையும் கலந்து வருகிறது.

குறுகுறுப்பான அந்த முதல் காதலை பற்றி சில நடிகைகள் மனந்திறந்தபோது..!

நிகிலா விமலின் ‘ரியல் ஹீரோ காதலன்’

நீங்கள் காதலித்தீர்களா? என்று என்னிடம் கேட்டால், இல்லை என்று தான் பதிலளிப்பேன். ஆனால் முதல் காதலை நினைத்துப்பார்க்கும்போது ஒருவர் நினைவில் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு, எனக்கு நெருக்கமான பெண் ஒருவர் என்னை அழைத்து, ‘நிகிலா உனது போன் நம்பரை ஒரு பையன் கேட்கிறான்.. கொடுக்கட்டுமா?’ என்றார். வழக்கமாக எல்லா பெண்களும் சொல்வதுபோல் நானும், ‘கொடுக்கவேண்டாம்’ என்று கூறிவிட்டேன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த பெண் என்னிடம், ‘அந்த பையனுக்கு உன் மேல் ஒரு இது..’ என்றார். அப்போது நான் நடிகையாகியிருக்கவில்லை. பள்ளிகளில் நடக்கும் ஏராளமான கலைப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றிருக்கிறேன். நடன போட்டிகளில் நிறைய பங்கேற்பேன். ஒருமுறை என்னை சந்தித்த அந்த நபர், என்னை நடனப் போட்டிகளில் பார்த்திருப்பதாகவும், ரெயிலில் ஒருமுறை என்னை சந்தித்து பேசியதாகவும் சொன்னார். அந்த சம்பவங்கள் எதுவும் என் நினைவில் இல்லை.

அவரை பற்றி எதையும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அவரது பெயரைகூட நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்று அந்த பெண்ணிடம் கூறிவிட்டேன். சில நேரங்களில் நான் பங்குபெறும் பொது நிகழ்ச்சிகளில், என்னை சந்தித்து பேசுகிறவர்களில் அவரும் இருக்கிறார். சில பயணங்களின்போதும் பேச முன்வருவார். எதுவாக இருந்தாலும் தூரத்தில் இருப்பது நல்லது என்று மனது சொல்கிறது.

இன்ஸ்டாகிராமில் ‘திருமணமாகிவிட்டதா.. திருமணம் செய்துகொள்ள விருப்பமா?’ என்ற கேள்விகள் வரும். ‘திருமணமாகவில்லை.. உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை’ என்று இரண்டு வரிகளில் பதிலளித்துவிடுவேன். இதுதான் எனது டிரேடு மார்க் பதில். சமூக வலைத்தளங்கள் மூலமாக வரும் காதலையும், கல்யாண ஆலோசனைகளையும் கண்களை மூடிக்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். எனது ரியல் ஹீரோ ஒரு நாள் வருவார். அன்று அவரை காதலித்தால் போதும்.

(இவர் வெற்றிவேல், கிடாரி, தம்பி போன்ற படங்களில் நடித்தவர்)

மடோனா செபாஸ்டினின் ‘தூதுபோன காதல்’

காதலை அறிந்துகொள்ள நாமும் காதலிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. காதலிக்கும் பெண்களுக்கு சப்போர்ட் செய்தாலும் போதும். எனது நண்பனின் காதலுக்கு உதவியதுதான், எனது முதல் காதல் நினைவு.

உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனது நெருங்கிய நண்பனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. அவள் வேறு வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஈர்ப்பும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது போன்று அப்போது செல்போன், சோஷியல் மீடியா போன்றவைகள் இ்ல்லை. அதனால் இருவரும் தகவல் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவனது தவிப்பை கேட்டுக் கொண்டிருப்பதுதான் எனக்கும், என் தோழிகளுக்கும் பொழுதுபோக்கு.

அந்த வருடம் இதுபோன்ற காதலர் தினம் வந்தது. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். அதனால் அந்த காதலர் தினத்தன்று அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்க முடிவு செய்தோம்.

அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு காலையிலே இருவரும் வந்துவிட்டார்கள். அது பள்ளிக்கூட அறைதான். அதற்கு ஐந்து வாசல்கள் உண்டு. மாணவர்களோ, மாணவியரோ அதில் எந்த வாசல் வழியாகவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு வாசலில் நின்றுகொண்டோம். யாராவது வந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்பது எங்கள் திட்டம்.

‘கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. மாணவர்கள் வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் பேசவேண்டியதை எல்லாம் பேசிக்கொள்ளுங்கள்’ என்றோம். அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?

காலையில் என்ன சாப்பிட்டாய்? கடைசியாக என்ன சினிமா பார்த்தாய்? என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். காதலை பற்றியோ அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையுமோ அவர்கள் பேசியிருக்கவில்லை. அதுமட்டுமில்லை. திடீரென்று அந்த காதலன் எங்களை நோக்கி ஓடிவந்தான். ‘நான் எல்லாவற்றையும் அவளிடம் பேசிவிட்டேன். இனி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அடுத்து என்ன கேட்கவேண்டும் என்று சொல்லுங்கள்..’ என்றான்.

நான் தலையில் கையைவைத்துக்கொண்டு அவனை பரிதாபமாக பார்க்க, அந்த பெண்ணோ அவளது தோழிகளிடம் போய் நின்றுகொண்டு, ‘அவனிடம் அடுத்து எதை பேசுவதென்று ஐடியா கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். இப்போதும் காதலர் தினம் வரும்போது அந்த பழைய காதல் ஜோடியை நினைத்துப்பார்த்து சிரித்துக்கொள்வேன்.

(இவர் கவண், காதலும் கடந்துபோகும் போன்ற சினிமாக்களில் நடித்தவர்)

சானியாவின் ‘ஐந்தாம் வகுப்பு ஆனந்த காதல்’

“அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எல்லா வகுப்புகளிலும் நன்றாக படிக்கும் மாணவர்களும், அடிதடி மாணவர்களும் உண்டல்லவா. நன்றாக படிப்பவர்கள் பட்டியலில் இருந்த மாணவனுக்கும்- எனக்கும் அவ்வப்போது மோதல் வரும். எனக்கு எதிராக அவன் அவ்வப்போது ஏதாவது புரளியை கிளப்பிக்கொண்டே இருப்பான்.

அன்று எல்லோரும் வகுப்பில் இருந்து வெளியேறி கம்ப்யூட்டர் அறையை நோக்கி சென்றுகொண்டிருந்தோம். நான் சில அடிகள் எடுத்துவைத்ததும் திரும்பிப் பார்த்தேன். அப்போது அந்த மாணவன் வகுப்பில் இருந்த என் பையை திறப்பதை பார்த்தேன். நான் பார்த்ததும் அவன் கம்ப்யூட்டர் அறைக்குள் ஓடிவிட்டான்.

அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியவில்லை. புத்தக பைக்குள் அவன் எதை வைத்தான் என்று திரும்பிச் சென்று பார்க்கவும் நேரமில்லை. அவன் அருகில் சென்று, ‘என் புத்தக பையை திறந்து என்ன செய்தாய்?’ என்று கேட்டேன். அவன் எதுவும் சொல்லாமல் கடந்துபோய்விட்டான். நான் ஒருவித தவிப்பிலே இருந்தேன். கம்ப்யூட்டர் வகுப்பிலே கவனம் செல்லவில்லை.

அந்த வகுப்பு முடிந்ததும் ஓடிச்சென்று பேக்கை திறந்து பார்த்தேன். சில போட்டோக்கள் அதில் இருந்தன. ஒவ்வொன்றின் பின்னாலும் ஐ லவ் யூ, ஐ வாண்ட் யூ, வில் யூ மேரி மீ.. என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

நான் அதை எல்லாம் அப்படியே கொண்டு போய் என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மா அதை பள்ளி முதல்வரிடம் கொடுத்துவிட்டார். அவனை கடுமையாக திட்டினார்கள். அந்த கோபத்தில் சில நாட்கள் என்னுடன் பேசாமல் இருந்தான். பின்பு நல்ல நண்பனாகிவிட்டான். இப்போதும் அவன் எனது நல்ல நண்பர்களில் ஒருவனாக இருக்கிறான்”

(இவர் லூசிபர், குயின் போன்ற படங்களில் நடித்தவர்) 

Next Story