கோரிக்கை மனு கொடுக்க சென்ற வினியோகஸ்தர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதா? டி.ராஜேந்தர் கண்டனம்


கோரிக்கை மனு கொடுக்க சென்ற   வினியோகஸ்தர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதா?   டி.ராஜேந்தர் கண்டனம்
x
தினத்தந்தி 8 Feb 2020 11:53 PM GMT (Updated: 2020-02-09T05:23:07+05:30)

“கோரிக்கை மனு கொடுக்க சென்ற வினியோகஸ்தர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதா?”, என்று வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி லைகா நிறுவனம் தயாரித்த ‘தர்பார்’ படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக வினியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்தை அணுகியபோது, ‘எங்களுக்கு செலவு அதிகமாகி விட்டது. டைரக்டர் முருகதாஸ் அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். அவரிடம் போய் கேளுங்கள்’, என்று பதிலளித்து இருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் மீது ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின்பேரில் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நியாயமல்ல. மனு கொடுக்க சென்ற வினியோகஸ்தர்கள் எந்த தகராறும் செய்யவில்லை. அவர்கள் மீது கொலைமுயற்சி புகார் கொடுத்திருப்பது தர்மம் அல்ல.

போராட்டம் நடத்த முடியும்

ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து படங்களை இயக்கவேண்டும். அவர் இயக்கிய படங்களை வினியோகஸ்தர்கள் திரைக்கு கொண்டுவர வேண்டும். இதை அவர் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அவருக்கு டைரக்டர் சங்கம் இருப்பதுபோல, எங்களுக்கும் சங்கங்கள் இருக்கிறது. வினியோகஸ்தர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய முத்தரப்பினரையும் கூட்டி வினியோகஸ்தர்களுக்காக போராட்டம் நடத்த முடியும். இதை ஏ.ஆர்.முருகதாஸ் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

பேட்டியின்போது சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் மன்னன் உடனிருந்தார்.

Next Story